பூக்கி — திரை விமர்சனம்

சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமான வார்த்தைப் பிரயோகம் ‘பூக்கி’. அன்பானவர்களை அழைக்கும் ஒரு வார்த்தையாக காதலர்கள் மத்தியில் இது இன்னும் பிரபலம்.

ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்த பாலமாக செயல்படும் இந்த வார்த்தை, காதல் ஜோடியான அஜய் திஷன், ஆர்.கே.தனுஷாவுக்குள்ளும் காதலை வலிமையாக்குகிறது

ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜோடி தங்களுக்கு இடையே ஏற்படும் சிறு மோதலில் பிரிந்து விடுகிறார்கள், இனி சேரவே கூடாது என்கிற தீவிர முடிவுடன்.

ஆனால் அந்தக் காதல் அவர்களின் பிரிவை வலி மிக்கதாக மாற்றி விடுகிறது.

ஆனாலும் ஈகோ சும்மா இருக்குமா… தங்களது காதல் பிரிவில் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக காதலி ஆன்மீக தேடலில் ஐக்கியமாகும் அளவுக்கு தன்னை மாற்ற முயல்கிறார். காதலன் ஜிம்முக்கு எல்லாம் போய் தன் எண்ண ஓட்டத்தை வேறு பக்கம் திருப்ப முயற்சிக்கிறான். ஒரு கட்டத்தில் எந்த ஈடுபாடும் எடுபடாமல் போக…

இதன் பிறகே காதல் பிரிவுக்கு மற்றொரு காதல் தான் மருந்தாக இருக்க முடியும் என்று தீர்மானிக்கிறார்கள். அதன்படி, இருவரும் தங்களுக்கான புதிய ஜோடியை நோக்கி பயணிக்க, அந்தக் காதல் அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பது சந்தோஷம் ‘பூக்கி’ற கிளைமாக்ஸ்.
இன்றைய இளைஞர்களின் காதலை பதம் பார்த்து இதம் பார்த்து தந்திருக்கிற படம்.

நாயகனாக வரும் அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் கவர்கிறார். காதல் உடையும் இடம் தொடங்கி பிரிவு வலியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்கள் வரை நடிப்பே தெரியாத விதத்தில் அப்படி ஒரு நடிப்பு. முன்னாள் காதலியை சந்திக்க வரும் அந்த கிளைமாக்ஸ் தேர்ந்த நடிப்பின் உச்சம். தன் தந்தை பற்றி புதிய காதலியின் தந்தை தரக்குறைவாக பேசும் காட்சியில் காட்டும் ஆவேசம் இவர் நடிப்பில் வேற லெவல்.

நாயகியாக வரும் ஆர்.கே.தனுஷா, நடிப்பிலும் அழகு. காதல் மட்டும் அல்ல, தான் கண்டெடுத்த ஆன்மீகமும் போலி என்று உணருமிடத்தில் உள்வாங்கிய அந்த சோகம் முகத்தில் வெளிப்படுவது இவர் நடிப்பில் தனி அழகு.

நாயகனின் அப்பாவாக வரும் பாண்டியராஜனை முதல் பகுதியில் சாதாரணமாக காட்டிவிட்டு பிற்பகுதியில் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார்கள். சொந்த வீட்டை பார்க்க தன்னை அழைத்து செல்லும் மகனை மகிழ்ச்சி ததும்ப கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டே வரும் இடத்தில் நடிப்பிலும் சீனியர் என்பதை நிரூபிக்கிறார்.

மனோதத்துவ நிபு ணராக வரும் லட்சுமி மஞ்சு, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் காட்சிகளை நகர்த்த உதவுகிறார்.

சாமியாராக சுனில் வந்து போகிறார்.

நாயகியை மாப்பிள்ளை பார்க்க வருபவராக மின்னல் போல் வந்து போனாலும், ஒளியாக மனதில் தேங்கிப் போகிறார் ஜெகன் கவிராஜ்.

இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா என நட்சத்திர கூட்டம் அதிகம். இவர்களில் பிளாக் பாண்டியும் பிரசன்னாவும் வரும் காட்சிகள் முழுக்க மது பாட்டில்கள் பின்னணியில் என்பது கடுப்படிக்கிறது.

நடிப்புக்கு தலையை காட்டினாலும், இசைக்கு தலையாட்ட வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வலியை நமக்குள் முழுசாக கடத்த தவறி விடுகிறது.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, முதல் காட்சியிலேயே பிரிந்து போகும் காதலர்கள் முடிவில் ஒன்று சேர்வார்களா என்ற பதட்டத்தை, முன்னாள் காதலர்களின் மாறுபட்ட மனநிலையில் காட்சிப்படுத்தி இருக்கிறார். அந்த விதத்தில் இன்றைய காதலுக்கு புது டைவர்ஷன் கொடுத்திருக்கிறார். முன்னாள் காதலர்கள் இருவருமே தங்கள் புது ஜோடியுடன் ஷாப்பிங்கில் சந்திக்கிற அந்த எதிர்பாராத தருணம் நிச்சயம் ரசனைக்கு புதுசு. கொண்ட காதல் உண்மையாக இருந்தால் காதலை காதலே சேர்த்து வைக்கும் என்ற இந்த ஒரு வரி கதைக்குள் இயக்குனர் ஆடி இருப்பது காதல் நாட்டியாஞ்சலி.

ரேட்டிங் : 5.5/10.
Comments (0)
Add Comment