தாய் கிழவி — திரை விமர்சனம்

கணவனை இழந்த மூதாட்டி பவுனுத் தாயி , கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.அதோடு வட்டிக்கு பணம் கொடுக்கும் அவர், அதை வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொண்டு சுற்று வட்டார மக்களின் எரிச்சலை சம்பாதிக்கிறார்.

இதனால் ஊர் மக்கள் அவரை பார்த்தாலே அச்சப்படுவதோடு, அவர் எப்போது போய் சேர்வார் என்ற எண்ணத்தோடு அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கிழவிக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். மூணு பவுன் நகை பாக்கிக்காக மகளின் கணவன் அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறான்.

திடீரென்று தாய்க் கிழவி பக்கவாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விட… இதனால், 3 மகன்களும் ஊர் மக்களும், தாய்க்கிழவியின் மரண நிமிடத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இப்படி இரண்டு நாட்கள் வெறுமனே கடந்து போன நிலையில் ஒரு நகைக்கடை முதலாளி மூலம் அவர் ஒரே சமயத்தில் 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது.

அந்த ஊர் வழக்கப்படி, தாய் இறந்த பிறகு வீடு, நிலம் ஆகியவை மகன்களுக்கும், அவரது நகைகள் பெண் பிள்ளைக்கும் சேரும் என்பதால், தாயின் இறப்பை தள்ளி வைத்து, அதற்குள் யாருக்கும் தெரியாமல் மொத்த நகைகளையும் சுருட்ட முடிவு செய்கிறார்கள். வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் தேடிப் பார்த்த போதும் நகை கிடைக்கவில்லை. நகை விவரம் தெரிய வர, கிழவியே உயிர் பிழைத்து வந்தால் தான் ஆயிற்று.

அதுவரை தாய்க் இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது மூன்று மகன்களும் நகைக்காக அவரை காப்பாற்றும் முயற்சியில் நகரின் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் தாய்க்கிழவி பிழைத்தாரா?, அவரது நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா ? என்பதை கலகல பாணியில் சொல்வதே இந்த கதைக்களம்.

ஒரு பெண் சுயமாக இயங்குவதோடு, வயதானாலும் தன்னம்பிக்கை குன்றாமல், தைரியத்துடன் பிறரின் ஆதரவு மற்றும் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும், என்ற கருத்தை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருப்பது படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது.

பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் தாய்க்கிழவியாக நடித்திருக்கும் ராதிகா, அந்த கேரக்டருக்கேற்ப நடிப்பிலும் தன்னை உரு மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தைரியம், திமிர், அடாவடி, அதீத தன்னம்பிக்கை என தாய்க் கிழவியாக கம்பீர வலம் வருகிறார். ராதிகாவின் மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக நடித்திருக்கும் ரேச்சல், மருமகனாக முத்துக்குமார், உறவினராக முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக இளவரசு ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பின் மூலம் அரங்கை கலகலப்பாக்குகிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இந்த கிராமத்து கதையின் பலம்.

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், தன் கேமரா மூலம் தென் தமிழக கிராமத்து மண் சார்ந்த மக்களை திரை நிரப்பி இருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சிவகுமார் முருகேசன், பெண்கள் சுயமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்ற கருத்தை கிராமத்து மூதாட்டி ஒருவரின் மூலம் சொல்ல இந்தக் கதையை கையில் எடுத்திருக்கிறார்.

அதை அழுத்தமாக சொல்லாமல், கலகலப்பாக சொன்னால் போதும் என்ற மனநிலையில் காட்சிகளை நமக்குள் கடத்தி இருக்கிறார். ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் கேரக்டர் மூலம் முதியோரின் உயிர் துச்சமாக மதிக்கப்படுவதை காட்டும் இடத்தில் கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது. பால சரவணன் நடிப்புக்கு மகுடம் சூட்டுவதும் இந்த இடம் தான்.

காதல் செய்யும் பருவத்தில் பேரன் இருக்க, மகளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் தாய்க் கிழவியின் முடிவு மட்டும் ஏற்புடையதாக இல்லை. கறார் வட்டி வாங்கி

ஊர்க்காரர்களை நடு நடுங்க வைக்கும் தாய்க்கிழவி, கடைசி வரை சுயநலக் கிழ வியாகவே நமக்குள் கடந்து போகிறாள்.

ரேட்டிங்: 4.5/ 10.
Comments (0)
Add Comment