சரத்குமார் வெளி உலகுக்கு படகு மெக்கானிக். உள்ளுக்குள் போதைப் பொருள் வியாபாரி. கல்லூரியில் படிக்கும் தனது ஒரே மகள் தேவிகா சதீஷ் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
மகளோ உடன் படிக்கும் ஏழை மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வர, கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலுக்கு கடத்தி சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், தப்பித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.
ஆழ்கடலில் பயணப்படும் மீன்பிடி படகு ஒன்றில் கதை நடப்பதால் படத்திற்கு ‘ஆழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்
கள். ஒரு மீன்பிடி படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன்.
அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், அதில் முடிந்தவரை புதுமையை வெளிக்காட்ட முயற்சித்திருக்
கிறார். வழக்கமான பாசக்கார அப்பா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் கொடூரமான வில்லன் என்று நடிப்பில் இரட்டை முகம் காட்டுகிறார்.
இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், மரண பயத்தை காட்டிய காதலியின் தந்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் தன்
இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், குறைந்தபட்ச காட்சிகளில் நிறைவாக வந்து போகிறார்.
ஒரு காட்சி என்றாலும் நேர்மைக்கு குரல் கொடுக்கும்
யூடியூபராக நிகில் முருகன் மனதில் நிற்கிறார்.
வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா என நட்சத்திர கூட்டம் அதிகம்.
கடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயரின் கேமரா அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறது. படகின் உட்புறத்தில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் படகின் இன்ஜின் அறை என குறுகிய இடத்தில் காட்சிகளை படமாக்கி படகுக்குள் நாமும் இருப்பது போன்ற உணர்வை தந்து விடுகிறார்.
ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் இசைத்தாலாட்டு. வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை படத்தின் இன்னொரு பிளஸ்.
ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் ஆழ்கடலின் ஓசை, மீன்பிடி படகின் பயண ஓசை கன
கச்சிதம்.
எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன், ஆழ் கடலில், உயிருக்கு போராடும் இருவரது வாழ்வா சாவா போராட்டத்தை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம் பிற்பகுதி முழுக்க இந்த ஜீவ மரண போராட்டம் தொடர்வதால் கதை அங்கேயே நங்கூரமிட்ட கப்பலாய் நின்று போகிறது.
என்றாலும் மகள் மீதான பாசத்தை அப்பா சரத்குமாரும் காதலி மீதான
நேசத்தை காதலனும் வெளிப்படுத்தும் அந்த ஒரு இடம் படத்தை இமயமாய் உயர்த்தி விடுகிறது.
ரேட்டிங்: 4.5 / 10.