திருமணமாகி சில மாதங்களில் கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் துணிகிறார். தீவிர சிகிச்சையில் உயிர் பிழைப்பவருக்கு துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா ஆறுதல் கூற வருகிறார். ஆரம்பத்தில் அவரது அருகாமையை தவிர்க்க நினைப்பவர், அவரது அன்பில் கட்டுண்டு தன் திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் வரை பகிர்ந்து கொள்கிறார்.
அப்போது அவர் சொல்லும்
அதிர்ச்சியான தகவல், என் கணவரை நானே கொன்று விட்டேன் என்பதுதான்.
அவர் அப்படி சொன்னது உண்மையா என்பதை விவரிக்கிற ஃப்ளாஷ்பேக் மொத்த கதையையும் தாங்கி நிற்கிற படத்தின் ஜீவன்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ், இந்த கதைக்கு கிடைத்த அட்சய பாத்திரம். ஒரே வீட்டில் கணவருக்கும் தனது முன்னாள் காதலருக்குமான அந்த சந்திப்பு சூழலை நடிப்பால் அவர் கடந்து போவது தனி அழகு. பலம் வாய்ந்த அந்த கதாபாத்திரத்திற்கு அவரது உடல் மொழியும் இணைந்து நடிப்பு ஜாலம் செய்கிறது. இவர் தமிழ் திரைக்கு கிடைத்த கலைப் பொக்கிஷம்.
நிவேதிதாவின் முன்னாள் காதலராக சிபி சந்திரன், கணவராக அதுல் இருவரும் தங்களது கேரக்டர்களில் நிலைத்து நின்று ஆடுகிறார்கள்.
சிறு கதாபாத்திரம் என்றாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை அழகுபடுத்தி இருக்கிறார், நாசர். நிஜமாகவே மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது.
துறவறம் பூண்ட சகோதரியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி அந்த கேரக்டரை தனது நடிப்பால் தாங்கி பிடிக்கிறார். குழப்பம் நிறைந்த மனங்களை தெளிவுப்படுத்தும் அந்த கேரக்டர் படத்தை இன்னொரு தூணாகவே தாங்குகிறது.
கௌரவ தோற்றம் என்றாலும் சோடா புட்டி கிழவி கீதா கைலாசம் மனதில் நிற்கிறார்.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், நாயகியின் முன்னாள் காதலனுக்கும் இந்நாள் கணவனுக்குமான சந்திப்பு காட்சிகளை கேமரா வழியே நமக்குள் துல்லியமாக கடத்தி விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், ஒரு இளம் பெண்ணின் முன்னாள் காதலன் அவளது கணவனின் நண்பனாக வீட்டுக்குள் வரும் காட்சி தொடங்கி அந்த முக்கோண சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் வரை இன்றைய
2 கே கிட்ஸ் காதலின் பரிமாணத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து
மேய்ந்திருக்கிறார். ஒரு உயிர் போவதற்கு காரணமாக இருக்கும் சம்பவமே, மற்றொரு உயிர் பிழைப்பதற்கும் காரணமாக அமையும் என்ற வாழ்வியல் தத்துவம் நிச்சயமாகவே இயக்குனர் ஸ்பெஷல்.
ஓ(ஹோ) பட்டர்பிளை!
ரேட்டிங் :5.5/ 10.