கார்மேனி செல்வம் –திரை விமர்சனம்

கார் ஓட்டுநர் சமுத்திரக்கனிக்கு மனைவி, மகன் என்று சின்ன குடும்பம். அளவான வருமானம் அழகான வாழ்க்கை என்று குடும்பச் சக்கரம் தடையின்றி சுழன்று கொண்டிருந்த நேரத்தில் சொந்த வீடு, சொந்த வாகனம் என்று ஆசை எட்டிப் பார்க்கிறது. தனது பணக்கார முதலாளிக்கு கார் ஓட்டி வந்தவர், அவர் சொந்த வேலையாக சில மாதங்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டிய சூழலில், அவர் காரை வாடகைக் கார் ஆக்கி வருமானம் பார்க்கிறார். வருமானம் அதிகரித்த நிலையில் கூடவே வட்டிக்கும் கடன் வாங்கி அரை கிரவுண்டு நிலம் வாங்கிப் போடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்கத் தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாகவும் மாற்றிக் கொள்கிறார்.

சிக்கல் இங்கே தான் தொடங்குகிறது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்க, சோதனையாக வாடகைக்கு ஒட்டி வந்த முதலாளியின் காரும் விபத்தில் சிக்க…

கடனில் இருந்து குடும்பத்தை மீட்க வெளிநாட்டில் கார் ஓட்ட போகிறார் சமுத்திரக்கனி.

இதன் பிறகாவது குடும்பம் கடனில் இருந்து மீண்டதா? என்பதை மனதுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தின் அதிகபட்ச ஆசையின் விளைவையும் நெஞ்சில் தைக்கிற விதமாய் சொல்லி இருக்கிறார்கள்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தம் மீறாமல் வெளிப்படுத்தக் கூடிய சமுத்திரக்கனிக்கு இந்த கேரக்டரும் அவருக்கேற்ற அட்சய பாத்திரமாய் அமைந்திருக்கிறது. குடும்பத்தின் போதாமை பற்றிய ஆதங்கம் மனைவியிடம் இருந்து வரும்போதெல்லாம் அவர் சமாதானப்படுத்த முயலும் அத்தனை இடங்களும் நடிப்பில் நவரசம் கொட்டுகின்றன.

முதலாளி கௌதம் மேனனிடம் தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டும் இடத்திலும் தனது எதார்த்த நாயகன் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்.

அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியா சந்திர மௌலி இன்னொரு நடிப்பு ஆச்சரியம். ஒரு பக்கம் சொந்த வீடு ஆசையை கணவனின் மனதுக்குள் ஆழமாக விதைத்து விட்டு சிக்கல் வந்த பிறகு கணவனை கேள்விகளால் துளைக்கும் இடங்களில் இந்த இல்லத்தரசி, நடிப்பில் அரசியாக ஜொலிக்கிறார்.

சமுத்திரக்கனியின் முதலாளியாக கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக சிறுவன் கரண் சக்கரவர்த்தி பொருத்தமான பாத்திரத் தேர்வில் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக அந்த குட்டிப் பையன் தனது அப்பாவை ‘நீ அறிவாளிப்பா’ என்று சொல்லும் இடங்கள் உதட்டோர புன்னகைக்கு உத்தரவாதம்.

ரியல் எஸ்டேட் ஓனராக கோதண்டம் கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிப்பை சிதற விடுகிறார். படத்தில் இன்னொரு ரசனை ஏரியா, கடற்கரையை ஒட்டிய சமுத்திரக்கனியின் அந்த அழகான வீடு. இதில் கனவுகளை விதைத்த அந்த மர வீடும் அடங்கும்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷனின் கேமரா அழகான லொகேஷன்களை அழகுற கண்களுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது.

மியூசிக் லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளை உயிர்ப்புடன் நகர்த்துகின்றன.

கடன் படாமல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே வாழ்க்கை என்பதை சிந்திக்க வைக்கும்படி சொல்லியிருக்கும் இயக்குனர் ராம் சக்ரி, மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு நடத்தி இருப்பது அழகான பாடம்.

பிளஸ்: நடுத்தர குடும்பத்தை நாடி பிடித்து பார்க்கும் திரைக்கதை.

பிளாஷ் : அதை நம்பும் விதத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர்.

ரேட்டிங் : 6.5/10.

Comments (0)
Add Comment