கூர்நோக்கு மையத்தில் படித்து முடித்து வெளியேறும் நாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் ரூம் பாயாக வேலையில் சேருகிறார். அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் சம்பவங்களுக்கு விடுதியின் மேலாளர் தான் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். அதோடு நில்லாமல் அதற்கான ஆதாரங்களை கைப்பற்றுவதோடு விடுதியின் மேலாளரை கொடூரமாக கொல்லவும் செய்கிறார்.
தலைமறைவான அவரை வில்லன் கும்பல் கொலை வெறியுடன் தேட, அதே நேரம் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக காவல்துறையும் நிகிலை தேடுகிறது.
அந்த சொகுசு விடுதியில் நிகில் வேலை பார்க்க வந்த காரணம் என்ன?நிகிலுக்கும் அந்த சொகுசு விடுதி மேலாளரின்
கொலைக்கும் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானதற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை எதிர்பாராத திருப்பங்களோடு சொல்வதே இந்த ‘ரூம் பாய்’.
அம்மா, அப்பா, தங்கை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நாயகன் ஒரு கட்டத்தில் அனைவரையும் இழந்து அனாதையாகிறார். அதாவது அனாதை ஆக்கப்படுகிறார். தனது நிலைக்கு காரணமானவர்
களை தேடி பழி தீர்க்க நாயகன் எடுக்கும் அதிரடி அவதாரம் தான் கதைக்களம் என்றாலும், அதில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் துரோகங்களையும் சந்திக்கும் நாயகன் கேரக்டரில் புதுமுகம் நிகில் நிஜமாகவே கச்சிதமாக பொருந்திப் போகிறார். தனக்குள்ளான அத்தனை சோகங்களையும் அடக்கிக் கொண்டு பழி தீர்க்க அவர் மேற்கொள்ளும் பயணங்கள் அத்தனையும் உணர்வு பூர்வமாக படமாக்கப்பட்டிருக்
கின்றன.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி பாய்ச்சல் காட்டுபவர், விடுதியில் தங்க வந்த பெண்ணின் காதலுக்கு உள்ளாகும் இடத்தில் காதல் நாயகனாகவும் பாஸ் ஆகி விடுகிறார் .
நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷாவுக்கு வசீகர தோற்றம். நடிக்கவும் வருகிறது. கதைக்குள் இவரை இன்னும் கூடுதல் நேரம் உலாவ விட்டு இருக்கலாம்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி காப்பாளராக வரும் பிரபாகர், இன்
னொரு எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் அருண்ராஜா இருவரும்
வில்லத்தனத்தில் தேர்ந்து தெரிகிறார்கள்.
ஒருபாடலுக்கு நடனமாடிப் போகிறார், நிதிமரோலி.
இமான் அண்ணாச்சி வரும் கொஞ்ச நேரத்திலும் சிரிக்க வைக்கிறார்.
பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன் கேரக்டர்கள் கதைக்கு பக்கபலம்.
ஒளிப்பதிவாளர் சி.பாரதிராஜனின் கேமரா ஏலகிரியை திகட்ட திகட்ட படம் பிடித்து கண்களை நிறைவாக்குகிறது.
வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ரசனைக் களஞ்சியம்.
குறிப்பாக பட்டர்பிளை கண்ணடிச்சு பாடல் மனசுக்குள்ளே நின்னுடுச்சு.
சொகுசு விடுதிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் நடக்கும் கொடுமைகள் ஆகியனவற்றை வெளிப்படுத்தி அதிரவைக்கும்
கதையை முறையான திரைமொழியில் சொன்னதில் முழுமையாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்ராயன்.
பிளஸ்: நாயகன் சம்பந்தப்பட்ட அந்த
நெகிழ்ச்சியான பிளாஷ் பேக்.
பிளாஷ்: நாயகனை வில்லன் கோஷ்டியும் காவல்துறையும் ஒரே நேரத்தில் தேடும் கிளைமாக்ஸ்.
ரேட்டிங்: 5.8/10.