பிரேக் பாஸ்ட் — திரை விமர்சனம்

இன்றைய இளைஞர்களின் காதல் பார்வை எப்படியானது என்பதை சொல்ல வந்திருக்கும் படம்.

நாயகி பிரபல தொழிலதிபரின் மகள். நாயகனோ சரியான வேலையின்றி போராடுபவன். அதிலும் நோய்வாய்ப் பட்ட தன் தந்தையின் மருத்துவ செலவுகளுக்கே போராடுபவன்.

ஒரு கட்டத்தில் இவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. அடுத்தடுத்த சந்திப்பு நாயகிக்குள் காதலை கொண்டு வருகிறது. நாயகனுக்கு தனது நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுக்கிறார் நாயகி.

அன்பின் அருகாமையில் இவர்களது நட்பு காதலாக மாற, இந்தக் காதலுக்கு நாயகியின் தந்தை கடும் எதிர்ப்பை காட்ட… நாயகியோ தந்தையின் எதிர்ப்பை மீறி நாயகனை திருமணம் செய்து கொள்கிறார்.

அந்தஸ்து விஷயத்தில் இவர்களில் ஒருவர் இமயமலை. இன்னொருவர் பரங்கிமலை.

மணமுடித்த கையோடு தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியில் கணவனை அமர்த்தி அழகு பார்க்கிறார் காதல் மனைவி.

ஏற்கனவே இந்த காதல் திருமணத்தில் நாயகியின் தந்தை எதிரியாகி விட்ட நிலையில், கணவன் மனைவியின் அன்பை பதம் பார்க்க ஒரு சம்பவம் தானாக தேடி வந்து அமைகிறது. அந்த சம்பவம் கருவுற்ற மனைவியை கணவனிடம் இருந்து பிரிக்க…

பேதம் பார்க்காமல் இவர்களை இல்வாழ்க்கையில் இணைத்த காதல், அவர்கள் பிரிவுக்குப் பின் அவர்களை என்ன செய்தது என்பது நெஞ்சுக்கு நெருக்கமான கிளைமாக்ஸ்.

டைவர்ஸ் கேட்டு வந்த ஒரு இளம் தம்பதியிடம் மருத்துவர் கஸ்தூரி விசாரிப்பது போல் கதை தொடங்குகிறது.

நாயகனாக பிக் பாஸ் புகழ் ராணவ் வருகிறார் நல்லதோர் திரை அறிமுகம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை இயல்பு அவரது நடிப்பில். காதல் மனைவியா, தன் பெற்றோரா? என்று முடிவெடுக்க நேரும் இடத்தில் அந்தக் காட்சியின் வீரியம் இவரது நடிப்பின் மூலமும் சிறப்பு பெறுகிறது.

குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைக்கும் கிராமத்து நடுத்தர வர்க்க இளைஞன், வசதி வாய்ப்பு வந்த நிலையிலும் பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் கலங்கும் மகன், மனைவியின் பணத்திமிரால் பாதிக்கும் கணவன் என பல்வேறு போராட்ட நிலைகளிலும் இயக்குனரின் கதை நாயகனை நடிப்பில் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.

கோடிகளில் புரளும் நாயகி, ஆயிரங்களுக்கே அல்லாடும் நாயகன் என்ற கதைக் களத்துக்குள் நாயகியாக வரும் ரோஸ்மினும் அற்புதமாக பொருந்திப் போகிறார். அறிமுக நாயகி என்ற போதிலும் முதல் படத்திலேயே கிடைத்த அழுத்தமான பாத்திரத்தை அற்புத நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார்.
தான் நினைத்ததே சரி என்ற மனோநிலை கொண்ட பெண்ணை நடிப்பில் இயல்பாக பிரதிபலித்திருக்கிறார்.

கோடீஸ்வர மனைவி அந்தஸ்து பேதத்தில் வெளிப்படுத்தும் ஆவேசம் அத்தனையும் இவரது நடிப்பில் பொங்கும் எரிமலை.

மற்றொரு நாயகன், நாயகியாக கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் வருகிறார்கள். காதல் பிரிவு கல்யாண முறிவாக முற்றுப்பெறும் நேரத்தில் நடிப்பில் நாயகி அமுதா ஒரு படி முந்துகிறார். கோடீஸ்வர தந்தையாக வரும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா, நண்பனாக வரும் ரவி மரியா அனுபவ நடிப்பில் கதையோடு கலந்து போகிறார்கள்.

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவும் ஜிவி பிரகாஷின் இசையும் படத்தின் இரு பக்கத் தூண்களாக தாங்கி நிற்கின்றன. காதலில் அவசரம், அதே வேகத்தில் திருமணம், அதைவிடவும் அதிக வேகத்தில் விவாகரத்து என்று முடிந்து போகும் இன்றைய காதலுக்கு உணர்வுப்பூர்வமாக பதிலளித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, தற்போதைய காலகட்டத்தில் தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவுக்கு காரணமாக சொல்லப்படும் காரணம் மட்டும் சற்று வீக்காக இருக்கிறது. மண முறிவு வேண்டி வந்திருக்கும் இளம் தம்பதிகளை மனநல மருத்துவர் என்ற முறையில் விசாரிக்கும் கஸ்தூரி கதாபாத்திரம் கதைக்குள் உயர்ந்து நிற்கிறது. உண்மையில் கஸ்தூரி யார் என்று தெரியுமிடத்தில் அந்த அம்மா-மகள் செண்டிமெண்ட் இயக்குனரின் இயக்கச் சிறப்புக்கு சல்யூட் வைக்கத் தோன்றுகிறது.

பிளஸ் : காதல் முடிவுக்கு வரும் அந்த கவித்துவ கிளைமாக்ஸ்.
பிளாஷ் : இரு வேறு காதல் ஜோடிகளின் மாறுபட்ட கதைக்களம்.

ரேட்டிங் : 5.8/10.

Comments (0)
Add Comment