Battle –திரை விமர்சனம்

ராப் பாடகராக உயர வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரன், அதற்கான தீவிர முயற்சிகளில் இருக்கிறார். இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யா மீது காதலும் வருகிறது.

இதற்கிடையே அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய ராப் பாடகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அவருக்கு ஒரு கட்டத்தில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பும் தேடி வருகிறது. இதற்காக ஒரு பிரபல இசை நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்கிறது.

இந்த மகிழ்ச்சியை அதிகம் நீடிக்க விடாமல் நடக்கிறது ஒரு சம்பவம். காதலி ஆராத்யா ஆசிரியராக வேலை பார்க்கும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, அதைத்தொடர்ந்து
ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகிறது.

அந்த பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுவ தோடு அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகிறது.

இது நாயகிக்கு பொறுக்குமா… ராப் பாடலில் உலகப் புகழ்பெற்ற தனது காதலன் பள்ளியில் நடக்கும் அவலங்களை ஒரு பாடலாக விவரித்து பாடினால் அதன் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நம்பும் காதலி, காதலனிடம் இது குறித்த தன் விருப்பம் கூற, காதலனும் ஏற்கிறார்.

இது தெரிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை மிரட்டுகிறது. அது போதாது என்று நாயகனை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல இருந்த நிறுவனமும் அதற்கு தடை போட பார்க்கிறது.

வெளிநாட்டுக்கு சென்று பாடல் போட்டியில் கலந்து கொண்டால் உலகப் புகழ் தேடி வரும். ஆனால் காதலி வேலை பார்க்கும் பள்ளியின் அவலங்களை பற்றி பாடப்போனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

நாயகன் இப்போது என்ன முடிவு எடுக்கிறார்? மாணவர்களின் எதிர்காலம் கருதி பாடல் இசைத்தாரா? அல்லது ரிஸ்க் எதுவும் எடுக்க விரும்பாமல் உலக அளவிலான ராப் இசைப் போட்டியில் கலந்து கொண்டாரா என்பது எதிர்பார்ப்புகளுடன் கூடிய கிளைமாக்ஸ்.

நாயகனாக நடித்துள்ள அர்ஜுன் பிரபாகரன் ராப் இசைப் பாடகராக கவர்கிறார். ஆராத்யாவுடனான காதலிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். சில காட்சிகளில் அறிமுக நடிகர் என்பதை உணர வைக்கிறார். கிளைமாக்ஸ் ராப் பாடல் காட்சியில் உணர்ந்து நடித்து நடிப்பில் கரையேறி விடுகிறார்.
நாயகி ஆராத்யாவுக்கு காதலை விட பள்ளி அவலங்களை தோலுரிப்பது தான் அதிக வேலை ஆகிப் போகிறது. தன்னை நம்பிய மாணவியின் விபரீத முடிவில் கலங்கிப் போகும் இடத்தில் நம் கண்களையும் குளமாக்கி விடுகிறார்.

பிரச்சனைக்குரிய புள்ளி தாளாளராக கொடூர முகம் காட்டியிருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா. சரவண சுப்பையா, முனீஸ்காந்த், சுருளி, காயத்ரி இயல்பான நடிப்பில் கதைக்குள் கலந்து போகிறார்கள்.

யுவராஜின் ஒளிப் பதிவும், ஜீவாவின் இசையும் கதையோடு இணைந்து காட்சிகளை ரம்மியமாக்குகின்றன.

கல்வித்துறையில் நடக்கும் மோசடிகளை தன் பங்குக்கு வெளிச்சம் போட்டு காட்ட முனைந்திருக்கிறார் இயக்குனர் நாராயணன். அதற்கு அடிதடியை நம்பாமல் ராப் இசைப் பாடல் மூலம் ஊழலை உலகறியச் செய்ய மேற்கொண்ட முயற்சி புதுசாக இருக்கிறது.

பிளஸ் : அநீதிக்கு அஞ்சினாலும் அதற்கு தலைவணங்காத நாயகி கேரக்டரும் அதை ஏற்ற ஆராத்யாவின் நடிப்பும்.

பிளாஷ் : தனியார் பள்ளிகளின் அட்டூழியம் பற்றி பல படங்கள் வந்து விட்ட போதிலும் அதற்கு தீர்வு சொல்ல இயக்குனர் எடுத்த இசைக்களம்.

ரேட்டிங்: 4.5/10.

Comments (0)
Add Comment