ஐடி ஊழியரான ஜெய், தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சாப்பிட போன இடத்தில் மீனாட்சியை பார்த்ததும் காதலா கிறார்.
மீனாட்சியோ ரவுடித்தனங்களுக்கு பேர் பெற்ற மந்திரியின் மகள். அந்த மந்திரியை அரசியலில் உருவாக்கிய தலைவர் அதற்கீடாக மந்திரி மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்துகிறார். 60 தாண்டிய எல்லா துஷ்ட குணங்களும் நிறைந்த அந்த தலைவருக்கு தன் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லாத மந்திரியின் மனைவி அவரை அவமானப்படுத்தி அனுப்ப, அப்போதே ஆரம்பமாகிறது விபரீதம். தன் அரசியல் வாழ்வு
அஸ்தமிக்காமல் இருக்க வேண்டுமானால் தன்னை உருவாக்கிய கட்சி தலைவருக்கு தன் மகளை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் மந்திரி, மனைவியின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டு வர அவளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்கிறார்.
ஏற்கனவே மந்திரியின் கைவசம் உள்ள 300 கோடி ரூபாய் சொத்தை அடைய விரும்பும் மந்திரியின் குடும்ப நண்பர் தனது மகனிடம் மந்திரியின் மகளிடம் நட்பு வளர்க்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.
ஆனால் அந்த இளைஞனின் நட்பு வளையத்துக்குள் மந்திரி மகள் வராமல் எட்டியே இருக்க… இந்த நேரத்தில் நமது நாயகன் ஜெய் பார்வையில் படுகிறார் மந்திரி மகள் மீனாட்சி. கண்டதுமே காதலாகும் ஜெய், அடுத்த சந்திப்பிலேயே
தன் காதலை சொல்லி அதே வேகத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்.
தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு அவர்களின் அந்தரங்கம் ரகசிய கேமரா மூலம் ஹோட்டல் உரிமையாளர் கருடா ராமின் லேப்டாப்புக்கு வந்து சேருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஜெய் – மீனாட்சி தம்பதியை பிரித்து, மீனாட்சிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அமைச்சர் தந்தை திட்டமிடுகிறார். 300 கோடி சொத்து கைவிட்டு போய் விடக்கூடாது என்பதற்காக மந்திரி நண்பர் மகனும் மீனாட்சியை ஜெய் இடம் இருந்து பிரிக்க பகீரத பிரயத்தனம்
செய்கிறார்.
சொகுசு விடுதியின் சிக்கல் மற்றும் மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க நடக்கும் சதி ஆகியவற்றில் ஜெய் சிக்கித் தவிக்க… இந்த நேரம் பார்த்து மீனாட்சி காணாமல் போக… அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்து அடித்து உதைக்கிறது.
மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, அடுத்தடுத்து உருவான பல சிக்கல்களில் சிக்கிக்கொள்ள… அத்தனை சிக்கல்களையும் ஜெய் எதிர்கொண்டு மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்தாரா? என்பது பரபர கிளைமாக்ஸ்.
நாயகனாக வரும் ஜெய், வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தில் பொருந்தி போகிறார். காதல் மனைவி தன்னை சந்தேகிக்கும் இடத்தில் மனதளவில் நொறுங்கிப் போகும் இடத்தில் அவரது இயல்பான அந்த நடிப்புக்கு சபாஷ் சொல்ல வேண்டும்.
காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் ஒரு சேர கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் எல்லா இடங்களிலும் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார்.
ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதோடு, கொஞ்சூண்டு வில்லத்தனமும் காட்டி இருக்கிறார்.
யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் வரும்
ஆதித்யா கதிர், அதிரடி கவுண்டர்கள் மூலம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
வில்லனாக கருடா ராம் தனக்கான எல்லைக்குள் நின்று இனிதே களமாடுகிறார்.
சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா தங்கள் பாத்திரங்களில் நிரம்பி நிற்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்ல வேண்டும்.
காட்சிகளை தரமாக படமாக்கி
காட்சிகளுடன்
நம்மை இணைத்துக் கொள்ளும் வித்தையை செய்து இருக்கிறார்.
கிரிஷ் கோபாலகிருஷ்ண
னின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசை
திரைக்கதையோடு இணைந்து ஜாலம் செய்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது என்ற உண்மையை
ஓப்பனாக போட்டு உடைத்து இருக்கிறார். இளம் தம்பதிகளுக்குள்ளான காதலை சொன்ன விதத்தில்
இளமை ததும்புகிறது. நாயகியின் மந்திரி அப்பா கேரக்டர் முழுமையாக வடிவமைக்கப்படாதது சிறு குறை. வயதான காலத்தில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மணக்க விரும்பும் சரவண சுப்பையா கேரக்டர் முன்னாள் மந்திரி ஒருவரை நினைவு படுத்துகிறது. அதனாலயே அந்த கேரக்டர் இயல்பாக அமைந்து நம்ப வைக்கிறது. அந்தரங்கங்களை விலைக்கு விற்கும் கருடா ராம் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்.
பிளஸ்: கதை போகிற போக்கில் அடுத்தடுத்து ஏற்படும் சுவாரசிய திருப்பங்கள்.
பிளாஷ்: கதையை அழகாக நடத்திச் செல்லும் கேமரா.
ரேட்டிங்: 6.5/10.