அரசு தேர்வில் நடக்கும் முறை கேடுகளை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் இணையத் தொடர். அரசு பணிக்காக
ராப்பகலாக தங்களை தயார் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் கனவு, சில பண முதலைகளால் எப்படி நொறுங்கிப் போகிறது என்பதை ஆணி அடித்து சொல்லி இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மலைப்பிரதேசமான தைகாராவுக்கு மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தும் ஜான்சி,
மரமல்லிக்குப் பதிலாக பதவி ஏற்கிறார். அங்குள்ள காவல் துறை அதிகாரிகள் தன்னை போலி என்று கண்டுபிடிக்கும் முன்னரே
பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இதில் அவருக்கு ஒரு ஜெயிலரும் உதவுகிறார்.
யாரிந்த ஜான்சி?
அவர் எதற்காக இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார்? உண்மையான உயர் போலீஸ் அதிகாரி மரமல்லியை ஏன் கடத்தினார்? அவர் வந்த காரியம் முடிவதற்குள் போலீசின் சந்தேக பார்வையில் சிக்கினாரா? என்பதை பரபரப்புக்கு பஞ்சமின்றி சொல்லி இருக்கிறார்கள்.
ஒரிஜினல் போலீஸ் அதிகாரியை கடத்தும் முதல் காட்சியிலிருந்தே நம் கண்களை அங்கே இங்கே நகர விடாமல் தன் நடிப்பால் கட்டிப் போட்டு விடுகிறார், ஜான்சியாக வரும் துஷாரா விஜயன். அடுத்தடுத்த காட்சிகளில் உண்மை தெரிந்து இதோ மாட்டிக் கொள்ளப் போகிறார் என்று நம்ப வைக்கும் காட்சிகளில்
எல்லாம் அவரது நடிப்பு நம்மை காட்சிகளுடன் ஒன்ற வைத்து
ஈர்த்துக் கொள்கிறது. குறிப்பாக ஒரிஜினல் டிஎஸ்பியை பார்க்க அவரது தாயாரும்
மகளும் நேரில் வந்து விட, அவர்களை சமாளிக்கும் இடத்தில் அந்தப் பதட்டத்தை நடிப்பால் நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்.
டி.எஸ்.பி.யாக தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை மனதளவிலும் தயார்ப்படுத்தும்
ஜெயிலர்
ஜெயச்சந்திரனாக அப்பாஸ் கச்சிதம்.
இது விஷயத்தில் அவருக்கும் ஜான்சிக்கும் எந்த மாதிரியான பிணைப்பு இதை செய்ய வைக்கிறது என்கிற எபிசோட் பிற்பகுதி கதைக்கும் வலுவான அடித்தளம் ஆகி விடுகிறது.
மரமல்லியாக வரும் அதிதி பாலன்
அதிகாரச் செருக்கை காண்பிக்கும் இடத்திலும், ஜான்சியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் இடத்திலும் அந்த ஆற்றாமையின் வெளிப்பாடு இவரது அற்புத நடிப்புக்கே உரிய உன்னத இலக்கணம்.
தான் கடத்தப்பட்டது ஏன் என்பது தெரிந்த பிறகு தன்னை மாற்றிக் கொள்ளும் இடத்திலும் மனதுக்குள் தடம் பதித்து விடுகிறார்.
போலீஸ்காரராக வரும் சரவண சக்தி தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி உள்ளார். ஒரிஜினல் டிஎஸ்பியை அருகில் வைத்துக்கொண்டே போலி டி எஸ்பி.க்கு அவர் சல்யூட் வைக்கும் இடத்தில் அந்த காட்சியும் சேர்ந்து கனம் பெறுகிறது.
தம்பி மீது உயிரையே வைத்திருக்கும் கிராமத்து அக்கா சரண்யா கேரக்டரில் வசந்துரா நெகிழ வைக்கிறார். இளம் வயது சரண்யா கேரக்டரில் அக்ஷதா இன்னொரு நடிப்பு ஆச்சரியம்.
வில்லன் நரேன் மணி பார்வையிலேயே
பயமுறுத்த, அவரது இளம் வயது கேரக்டரில் வரும் சூரிய ஜெயாவும் பொருத்தமான
பாத்திரத்தேர்வு என்பதை தனது நடிப்பில் நிரூபிக்கிறார்
போலீஸ் அதிகாரியாக வந்து கதையின் திருப்புமுனைக்கு பெரிதும் உதவுகிறார் துரை சுதாகர்.
அருண் அமரேந்திரனின் கேமரா, தொடரின் இன்னொரு கேரக்டராகவே பயணித்து
இருக்கிறது. அந்த மலைப்
பிரதேசம் இவர் கேமரா வழியே அத்தனை அழகு.
தொடரில் அடுத்தடுத்து ஏற்படும் பதற்றங்களை பக்குவமாய்
பந்தி வைக்கிறது
சாம் சி எஸ். சின் இசை.
கனவுகளோடு அரசு பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, இந்த சிஸ்டம் இழைத்த மிகப் பெரிய துரோகத்தை காட்சி வாரியாக உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய விதம் அற்புதம். இதற்கு மூளையாகச் செயல் படும் திமிங்கலம் யாரென்பதை இரண்டாவது சீசனுக்காக விட்டு வைத்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் A.சற்குணம் சற்று இடைவெளிக்கு பின் தனது இயக்க முத்திரையை மீண்டும் ஆழமாக பதித்துள்ளார்.
பிளஸ்: தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பு குறையாமல் பயணிக்கும் திரைக்கதை.
பிளாஷ்: அரசு தேர்வு முறை கேடுகளை அப்பட்டமாக சொன்ன விதம்.
ரேட்டிங்: 7 /10.
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த இணையத் தொடரை.புஷ்கர் – காயத்ரி தம்பதியின் வால் வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.