கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தொடங்கிய தர்மன் திரைப்படம்

-டிராகன் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன். இந்தப் படத்தின்’ படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு.

தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை.

ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய, இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குனர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்; தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குனர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றுகிறார்கள், மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மைல்கல் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு, படக்குழுவினர், தயாரிப்பு குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தத் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள்
கலைப்புலி
எஸ்.தாணு, அன்புச்செழியன், இயக்குனர்கள்
ஆர்.கே. செல்வமணி, லிங்குசாமி, கண்ணன் (CTO, சன் நெட்வொர்க்), செண்பகமூர்த்தி, தமிழ்க்குமரன், கிருஷ்ணன் குட்டி (JIO Star), பாலசந்திரன் (JIO Star), பிரதீப் மில்ராய் பீட்டர் (JIO Star), ஆனந்த் (Saregama) மற்றும் சரவணன் வினோத் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் துறை சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது பெரும் மகிழ்வான நிகழ்வாக அமைந்தது. இது
ரஜினி நடிக்கும் 173-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விழாவில் ரஜினி பேசியதாவது.
நான் பேசினாலே பிரச்சினை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்சினை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள்.
பேசினால், இவர் பேசியிருக்கவே கூடாது என்பார்கள். எனக்கு ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது; நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.
இந்த படத்திற்கு நான்காவது இயக்குநர் தான் அஸ்வத் மாரிமுத்து. முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி. அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க வந்திருக்கிறார்.
சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்தோம். அஸ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பேட்ட’ படத்துக்கு பிறகு சிம்ரனுடன் நடிக்கிறேன்.

கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை. கமல் செய்த உதவியாகட்டும், ஊக்கமாகட்டும் சொல்லவே முடியாதவை. 1975-களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் சினிமாவுக்கு வந்தேன். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் கமலால் தான் பண்ணினேன். அதில் நான் நடித்த கேரக்டரில் முதலில் ஜெய் கணேஷ் தான் நடிக்க இருந்தார்.கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி என்னை நடிக்க வைத்தார்”
இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment