சிங்கீதம் –திரை விமர்சனம்

மோசடி குற்றத்திற்காக போபால் சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நாயகன் அயானுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரது குடும்ப சொத்தின் பத்திரம் கிடைக்கிறது. அதில் அவரது குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் குபேரபுரம் என்ற கிராமத்தில் இருப்பது தெரிய வர…
அந்த நிலத்தை தேடி குபேரபுரம் ஊருக்கு செல்கிறார். அந்த ஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்க சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள். அந்த ஊருக்கு அயான் சென்றதும், அந்த தங்க சுரங்கத்தின் மற்றொரு உரிமையாளர் தனது தந்தை தான் என்பதை தெரிந்து கொள்கிறார்.
எனவே, தனது நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து ஓடி விட திட்டம் போடுகிறார். ஆனால், அவரது திட்டம் நிறைவேறாதபடியும், அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும் அங்கு ஒரு விசித்திர சம்பவம் நடக்கிறது. அதன் பிறகு அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாக பாடுகிறார்கள்.
மக்கள் மட்டுமா? அந்த ஊரில் உள்ள சேவல் கூட அதிகாலை கூவலை பாட்டாகவே வெளிப்படுத்துகிறது. மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை, குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருதும் அந்த ஊர் மக்கள், அந்த குபேர சாபத்தில் இருந்து விடுபட்டார்களா?, பணத்தோடு ஓடிவிட நினைத்த நாயகன் அயானின் திட்டம் என்னவானது?என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். கமல் நடித்த
‘பேசும் படம்’ மூலம் வசனமே இல்லாத ஒரு படத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய அதே சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்? என்ற சிந்தனை புதுமையுடன் கூடிய வித்தியாசமான கதையை திரைக்கு தந்திருக்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பான கதாபாத்திரத்தில் வந்தாலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சிகளில் நடிப்பில் ‘உள்ளேன் ஐயா’ சொல்கிறார்.
மரங்களையும், இயற்கையையும் காப்பதற்கு போராடும் கெளரி கேரக்டரில் வரும் அஹல்யா பம்ரூ அந்த கேரக்டருக்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கிறார்.

தங்கச் சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, பேராசையை கண்கள் மூலமே வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
சைலஜம்மா கதாபாத்திரத்தில்
நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக சிவ நாராயணா, பெனர்ஜி, வம்சி ஆகியோரும் இருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் வந்து கவனம் பெறுகிறார் விஜய் தேவரகொண்டா.

ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி.யின் கேமரா வறண்ட நிலப்பரப்பில் பயணிக்கும் கதையை மண் மணம் மாறாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறது.
சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது நேர்த்தியான பணி மூலம் ரசிகர்களின் கொண்டாட்டமாகிறார்.

படத்தில் கொண்டாடப்பட வேண்டிய இன்னொருவர் கலை இயக்குநர் அரவிந்த் மூலேவ். கதைக்காக தனது கை வண்ணத்தில் ஒரு ஊரையே உருவாக்கி கதை சொல்ல வந்த உண்மைக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
எழுதி இயக்கி இருக்கிறார் சிங்கிதம் சீனிவாச ராவ். இயற்கை வளம் தான் நிஜமான தங்கம் என்பதை சொல்லும் அந்த கிளைமாக்ஸ் சமூக
அக்கறைக்கான வெளிப்பாடாகவும் அமைந்து இயக்குனருக்கு மகுடம் சூட்டுகிறது.

பிளஸ்: சமூக
அக்கறைக்கு வயதில்லை என்பதை இந்த வயதிலும் நிரூபித்த இயக்குனர்.

பிளாஷ்: வசனமே பாட்டாக அமைந்த போதிலும், அதையும் போகப் போக ரசிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்த கதைக் களம்.

ரேட்டிங்: 8.5/ 10.

Comments (0)
Add Comment