ராவ் பகதூர் -திரை விமர்சனம்

மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் என்ற ஒரு வரி தான் கதை. அதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.

மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சத்ய தேவ், முதிர் வயதில் தன் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறார்.
மருத்துவர்கள் வைத்த கெடுவை தாண்டியும் இறக்காமல் இருக்கும் காரணம், அவரை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சந்தேகம் தான்.
அந்த சந்தேகத்துக்கு மட்டும் விடை கிடைத்து விட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடுவேன் என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார்.

அந்த சந்தேகம் அவர் மனைவி மீதானது. அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது? என்பதை உணர்ச்சி பொங்கும் கதைக்களமாக தந்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிற கலைப் படைப்பு இது.
கலா ரசிகன் இதற்காக சட்டை காலரை தூக்கி விட்டுபெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
களவியல் தொடங்கி உளவியல் வரை சமீபத்தில் இப்படி ஒரு கதை சொல்லப்படவில்லை என்பதே இந்த படத்துக்கான சிறப்பு .
ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ், அந்தக் கேரக்டருக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்கிறார்
என்றே சொல்ல வேண்டும்.
இளமை மற்றும் முதுமை என இரண்டு வெவ்வேறு கால கட்ட தோற்றங்களை தனது நடிப்பால் வித்தியாசப் படுத்துகிறார். கூடவே ஆச்சரியப்படுத்தவும் செய்கிறார்.
நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா அந்த கேரக்டருக்கான உழைப்பை நடிப்பில் கொட்டி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், கிளைமாக்சில் தன் மீதான சந்தேகச்சாயலை உடைத்து நொறுக்கும் இடம், அடடா அற்புதம்.
மகனாக வரும் மாஸ்டர் கிரண் மற்றும் பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா கொடுத்த கேரக்டர்களை எல்லை தாண்டாத நடிப்பில் நிலை நிறுத்துகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், பீரியட் படத்திற்கான காட்சி அமைப்பை கச்சிதமாக வழங்கி இருக்கிறார்.

ஸ்மரன் சாய் பின்னணி இசை கதையோடு பின்னிப் பிணைந்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
பழைய அரண்மனையை துல்லியமாக வடிவமைத்த கலை இயக்குனர் ரோகன் சிங்கை பாராட்டாமல் போனால் இந்த விமர்சனம் நிறைவு பெறாது

கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா, எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்குள் சாதி வெறி, நிற வெறிக்கும் எதிராக சாணை பிடித்திருக்கிறார். தம்பதிகளுக்குள் ஏற்படும் சந்தேகக் கோடு அவர்கள் சந்தோஷத்துக்கே கேடாகி விடும் என்பதை தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி கில்லி அடித்திருக்கிறார்.

பிளஸ்: நாயகன் சத்யதேவின் நடிப்பு.

பிளாஷ்: நெஞ்சுக்குள் ஈட்டியை இறக்கும் அந்த பிளாஷ் பேக்.

ரேட்டிங்: 8.5/10.

Comments (0)
Add Comment