லெனின் பாண்டியன் -திரை விமர்சனம்

மணல் கொள்ளைக்கு எதிராக கிராம நிர்வாக அதிகாரி அர்ச்சனாவிடம் புகார் கொடுக்கிறார், விவசாயி கங்கை அமரன். நேர்மையான அந்த அதிகாரியும் மணல் லாரிகளை சிறைப் பிடிக்கிறார்.
இந்த மணல் கொள்ளையில் கொழித்து செழித்த கூட்டம் சும்மா இருக்குமா? கொடூரமாக அந்த அதிகாரி கொல்லப்படுகிறார்.

நேர்மையான அதிகாரிக்கு நேர்ந்த கொடூரத்துக்காக கங்கை அமரன் நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதோடு, கங்கை அமரனின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

உயர் அதிகாரிகளால் அடிக்கடி மன அவஸ்தையை அனுபவித்து வரும் காவலர் தர்ஷனுக்கு கங்கை அமரனுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரண பணியாக நினைக்கும் தர்ஷன், பிறகு வழக்கின் பின்னணி மற்றும் அதன் தீவிரத்தை உணர்ந்து கங்கை அமரனை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் பொறுப்பை திறம்பட செய்யத் தொடங்குகிறார். மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தும் கங்கை அமரன், அவர்களை சட்டம் முன் நிறுத்தினாரா ?, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இருக்கும் கங்கை அமரனை காக்கும் பொறுப்பை கவனமாக செய்ய முயற்சிக்கும் தர்ஷன், அதை வெற்றிகரமாக செய்தாரா ? என்பதை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சொல்வதே இந்த ‘லெனின் பாண்டியன்’.

தான் வளர்த்த ஆடு இறப்புக்கு மணல் லாரி டிரைவரிடம் நியாயம் கேட்கும் அப்பாவியாக அறிமுகமாகி, பிறகு சமூகப்பிரச்சனைக்கு எதிராக போராடும் முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கங்கை அமரன், தனது கேரக்டரின் ஒவ்வொரு அசைவிலும் நடிப்பில் பளிச்சிடுகிறார்.
கங்கை அமரனின் மனைவியாக நடித்திருக்கும் ரோஜா, தனது அனுபவ நடிப்பு மூலம் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறார்.

அறிமுக நாயகன் தர்ஷன் கணேசன், பணியின் ஆரம்ப கட்டத்தில் மேலதிகாரியிடம் வெறுப்பை சம்பாதிக்கும் இடத்தில் தொடங்கி, கங்கை அமரனின் உயிருக்கு பாதுகாவலாக பணி மேற்கொள்ளும் இடம் வரை கேரக்டரில் அத்தனை இயல்பாக உலா வருகிறார். நடித்ததே தெரியாமல் அப்படி ஒரு நடிப்பு. நடிகர் திலகம் குடும்பத்திலிருந்து ஒரு நவரசம்.

நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியான் அந்த கேரக்டரில் வெளிப்படுத்தும் நடிப்பு அத்தனையும் நெஞ்சுக்குள் இனிப்பு. (படத்தில் அதிக கைதட்டல் வாங்கிய பெருமையும் இவருக்கு வந்து சேருகிறது.)
காக்கி சட்டையின் திமிருக்கு போஸ் வெங்கட்டும், அதிகார திமிரை போலீஸ்கார தர்ஷனிடம் காட்டும் இடத்தில் சரவண சுப்பையாவும் வெறுப்பேற்றும் நடிப்பில் டிஸ்டிங்க்ஷன் வாங்குகிறார்கள். லோக்கல் தாதாவாக யுகேந்திரன் ஓகே மந்திரியாக இருந்தபடி மணல் கொள்ளையை திறம்பட நடத்தும் கேரக்டரில் ஆடுகளம் நரேன் அமர்க்களம். நாயகியாக வரும் ஷ்ரித்தாராவ் கணவருடன் போடும் சின்ன சின்ன சண்டைகளில் கவனம் ஈர்க்கிறார். காய்கறி மார்க்கெட்டில் கணவரின் மேலதிகாரி சரவண சுப்பையாவிடம் வார்த்தைகளை கொட்டும் இடத்தில் சிறந்த நடிகைக்கான அடையாளம் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே கிராமத்து அழகை இயல்பாக காட்சி படுத்தி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறார்..

இளையராஜாவின் இசை கதை மாந்தர்களோடு நம்மை இணைத்துக் கொள்ளும் மாயம் செய்திருக்கிறது.

மணல் கொள்ளைக்கு எதிரான விவசாயியின் போராட்டம், அவருக்கு பாதுகாப்பாக வரும் போலீஸ்காரர், பாதுகாப்பையும் மீறி விவசாயியை கொல்லத் துடிக்கும் மணல் கொள்ளைக் கூட்டம் இப்படியான பின்னணியில் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் டி டி பாலச்சந்திரன்முதல் படத்திலேயே சிறப்பாக கரையேறி இருக்கிறார்.

பிளஸ்: கிராமத்து விவசாயியாக வந்து நடிப்பில் அதகளம் செய்திருக்கும் கங்கை அமரன்.

பிளாஷ்: பின்னணி இசையில் காட்சிகளுக்கு கனம் சேர்த்த இசைஞானி.

ரேட்டிங்: 6.5/10.