தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததாலேயே கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட அம்மக்களுக்கு கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு காலாகாலமாக இருந்தே வருகிறது.
அதுதொடர்பான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்தாலும், அதையும் தாண்டி அந்தக் கொடுமைகள் இன்னமும் தொடர்வதை சமுதாய கோளாறு என்றே சொல்ல வேண்டும். இதற்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதத்தில் வந்திருப்பதே இந்த
‘தி கிராண்ட் மாஸ்டர்.’
கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வழக்கறிஞராக்க ஆசைப்படுகிறார். மகனுக்கோ செஸ்
விளையாட்டின் மீது வெறித்தனமான ஆர்வம். செஸ்
போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பது சிறு வயது முதல் அவன் கனவாகவே இருக்கிறது.
ஆனால், இந்த சமூகம் அவனது அம்மா செய்யும் தூய்மை பணியாளர் வேலையை காரணம் காட்டி புறக்கணிக்கிறது.
மகனின் ஆசையை அறிந்து கொள்ளும் அபர்ணதி, நிராகரிக்கப்பட்ட தன் மகனுக்கு தானே சதுரங்க விளையாட்டை பயிற்றுவித்து, நிராகரித்தவர்கள் முன் தலைநிமிர்ந்து நிற்க வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? தூய்மை பணியாளர் அபர்ணதிக்கும் சதுரங்க விளையாட்டுக்கும் என்ன தொடர்பு ? இந்த கேள்விக்கு பதிலாக உண்மை சம்பவங்களை மையமாக வைத்து சொல்வதே ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
விளையாட்டு என்பது திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அங்கும் ஏற்றத்தாழ்வும், சாதி பேதமும் தடைக் கற்களாகி நிற்கின்றன. தற்போதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வீரர்கள் பல தடைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டு அவமானம் சுமந்தே வெற்றிப் படிக் கட்டுகளை தொட முயல்கிறார்கள். இதற்கு சமுதாய உணர்வுள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் தடைகளை உடைக்க முன்வர வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது இந்ததிரைப்படம்.
கதையின் நாயகியாக வரும் அபர்ணதி, தூய்மை பணியாளராகவே நடிப்பில் மாறித் தெரிகிறார். கனமான பாத்திரங்கள் தான் தனது இலக்கு என்பதை அவர் இந்த படத்திலும் நிரூபித்து இருக்கிறார். ஆதிக்க சக்திகளால் கணவனுக்கு நேர்ந்த துயரம், மகனின் செஸ் விளையாட்டு ஆர்வம் புரிந்து அவனை அதில் உச்சம் தொட வைக்கும் போராட்டம் என்று படம் முழுக்க இவரது நடிப்பு அந்த கேரக்டரின் வலியை நமக்குள் கடத்தி விடுகிறது.
அபர்ணதியின் கணவராக வரும் லிங்கேஷ், ஆதிக்க சாதிகளின் வெறிக்கு பலியாகும் இடத்தில் கண்களை நனைய வைத்து விடுகிறார்.
கொடூர வில்லத்தனத்தில் சுரேஷ் மேனன் பயமுறுத்துகிறார்.
அபர்ணதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின் தனது நடிப்பின் ஒவ்வொரு அசைவிலும் செஸ் கனவை சுமந்து
திரிவதை உணர முடிகிறது.
தமிழரசி, அன்பு என சில பாத்திரங்களும் நம் மனதை உருட்டிப் போகின்றன.
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன், கதைக் காலத்தை கண் முன் நிறுத்துகிறார்கள்.
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்கவும், பின்னணி இசை காட்சிகளை ருசிக்கவும் வைத்திருக்கிறது.
சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பொருளாதார பாகுபாடுகளால் விளையாட்டில் தங்கள் கனவை கனவாகவே முடித்துக் கொள்ளும் மக்கள் பற்றி பேசும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, உண்மை சம்பவங்களை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வெற்றி செழியன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.
பிளஸ்: உண்மைக்கு நெருக்கமான கதை அமைப்பு.
பிளாஷ்: கொஞ்ச நேரமே வந்தாலும் மனிதநேயமிக்க அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரப்படைப்பு.
ரேட்டிங்: 7/10.
