டோரதி -திரை விமர்சனம்

உலக திரையரங்குகளில் விருதுகளை குவித்த படம்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே சனந்த், ரிஷிகாந்த் இருவரும் நண்பர்கள். சரத் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர் . ரிஷியோ அடிதடிக்கு அஞ்சாதவர். யாருக்கும் எதற்காகவும் பயப்படக்கூடாது என்று சொல்லி சொல்லியே சனந்த்தின் பயம் போக்குகிறார், ரிஷி. நண்பர்கள் வளர்ந்து வாலிபனான நிலையில் அடிதடிக்கு அஞ்சாத இளைஞர்களாக வலம் வருகிறார்கள்.

உயிருக்கு உயிரான இந்த நண்பர்களையும் ஒரு சம்பவம் பிரித்து வைக்கிறது. சனந்தை பிரிந்து வேறு ஒரு மாநிலத்தில் ரிஷிகாந்த் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சனந்தை கொலை செய்ய அவரது தந்தையிடம் இருந்தே ரிஷிகாந்துக்கு அழைப்பு வருகிறது. எதிர்பார்க்காத இந்த சூழ்நிலையை ரிஷிகாந்த் எப்படி எதிர்கொண்டார்?சனந்தை அவரது குடும்பத்தாரே ரிஷிகாந்த் மூலம் கொலை செய்ய முடிவு செய்தது ஏன்? ரிஷி அந்த உத்தரவை ஏற்று செயல்பட்டாரா?என்பதை மதுரைக்கே உரித்தான கெத்து குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் தங்களுக்குள்ளான ஆழ்ந்த நட்பை திரையில் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இருவரில் சனந்தின் கதாபாத்திரம் ஒரு படி மேலோங்கியே நிற்கிறது. கொஞ்சம் அசந்தாலும் உடல் மொழி மாறிப் போய்விடும் அந்த கேரக்டரை தனது நடிப்பில் அழகாக சுமந்து இருக்கிறார் .

சனந்த். தனக்குள்ளான திடீர் மாற்றத்தை வெளியே சொல்ல முடியாமல் குறிப்பாக உயிர் நண்பனிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நம்மை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஒரு உருட்டு உருட்டி விடுகிறார்.

நண்பனுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக வரும் ரிஷிகாந்த்தின் ஆக்ரோஷமான நடிப்பு, நட்புக்காக எதையும் செய்யும் கிராமத்து எதார்த்த மனிதனை கண்முன் நிறுத்துகிறது. உயிர் நண்பனையே கொலை செய்ய களம் இறங்கும் போது வரும் தடுமாற்றத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பர்கள் இருவருக்கும் திரையில் மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயம்.

கீர்த்தி சுரேஷ் டோரதி என்ற கதாபாத்திரத்தில் மின்னல் வேகத்தில் வந்து மறைந்து போகிறார். அவரது கணவராக சௌந்தரராஜன் சிறப்பு. பாசமும் கோபமும் இணைந்தே காணப்படும் கிராமத்து அப்பா. எப்போதும் வாயிலிருந்து விசில் புறப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி ஒரு கேரக்டரில் முத்துக்குமார் வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

ஜீவா சுப்பிரமணியம், கெஜராஜ், ராம்ஸ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அவர்களுக்கான காட்சிகள் மூலம் நடிப்பில் நிரம்பி நிற்கிறார்கள். திருவின் ஒளிப்பதிவு 80-களில் பயணிக்கும் கதைக் களத்தை நம்முடன் அழகாக இணைத்துக் கொண்டு விடுகிறது.

இளையராஜாவின் இசை படத்தின் உயிர்த் துடிப்பாகவே அமைந்து விடுகிறது.

“கல்யாண விருந்து” “முத்துமணி” பாடல்க ளில் இசை ராஜாங்கம் திரை முழுக்க பரவிப் பாய்கிறது. அதிலும் முத்துமணி பாட்டு நெஞ்சை சோகமாய் தாலாட்டிப் போகிறது திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், உயிர் நண்பர்கள் கதையை உயிரோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். கிராமத்தில் வாழும் பெரிய குடும்பங்கள் தங்கள் கௌரவத்தை காப்பாற்ற, தங்கள் வீட்டில் வாழும் உயிரைக் கூட காவு வாங்கத் தயங்க மாட்டார்கள் என்பதை இயல்பான காட்சிப் பதிவுகளாக்கி படத்தை வெற்றிப் பட்டியலில் சேர்த்திருக்கிறார். நண்பனை கொல்லப் போனவன் கடைசியில் என்னவானான் என்கிற அந்த கிளைமாக்ஸ் திரையில் இதுவரை கண்டிராத புதுசு.
டோரத்தி, கதை சொன்ன விதத்தில் அடியாத்தி.

பிளஸ்: நண்பர்கள் தேர்வு. கதையையே இந்த நட்பும் நடிப்பும் தான் தாங்கிப் பிடிக்கிறது.

பிளாஷ்: யதார்த்தம் நிறைந்த கிராமத்து கதைக்களம்.

ரேட்டிங்: 8.5/10.