தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் 1,000 ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை இயக்குனர்
டி.ராஜேந்தர் வழங்கினார்.
அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றம் மற்றும் நடிகர் சிம்பு (STR) ரசிகர் மன்றம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்தன.
இந்த நிகழ்வுக்கு டி.ராஜேந்தர் ரசிகர் மன்ற அமைப்பாளர் டி.வாசு முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த மனிதநேயப் பாடல்களைப் பாடி
தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர் என பல்வேறு துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் டி.ராஜேந்தர். அவருடைய 71-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரம் பேருக்கு அரிசி தானம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசுகையில், “இன்றைக்கு என்னிடத்தில் பெயர், புகழ், செல்வம், குடும்பம் அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட, கொடுக்க வேண்டும் என அனைவரும் நினைக்க வேண்டும். தம்மால் முயன்றளவு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற அடிப்படையில், அரிசி தானத்தை
செய்துள்ளேன்.
அதோடு என்னுடைய இணையதளத்தில் தானத்தினை வலியுறுத்தி பாடல் ஒன்றையும் வெளியிட இருக்கிறேன்” என்றார்.
அவரிடம் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக தனக்கென தனி இடம் பிடித்துள்ள நிலையில், அதில் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், ”இன்றைய இளைய தலைமுறையினருக்கும், ஜென்சி ரசிகர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதற்காக சொல்லவில்லை.
என்னுடைய வாழ்வில் நான் பட்ட அவமானங்கள், இடைஞ்சல்கள், கஷ்டங்கள் அதிகம். இருப்பினும் அவை அனைத்தையும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடுவேன். இதயத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தால் நிச்சயம் எல்லோருக்கும் வெற்றி தான்” என்றார்.
71-வது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் பிரத்யேகமாக ஒரு புதிய பாடலை எழுதி, இசையமைத்து, விழாவில் கூடியிருந்த அனைவரின் முன்பும் பாடிய அந்தப் பாடலின் வரிகள் வருமாறு.
“ஆண்டவன் கொடுத்த ஆத்மா
அன்பா வாழ்ந்து காட்டுமா
இருந்தா எடுத்துக் கொடுக்குமா
ஏழை துயரை துடைக்குமா
வானம் தான் பரந்தது
தானம் தான் சிறந்தது
இரக்க குணத்தில்
இறைவன் இருக்கின்றான்
கருணை வடிவில்
கடவுள் வாழ்கிறான்
அன்பே தெய்வம்
அறங்கள் செய்வோம்
ஆத்மனை நினைப்போம்
ஆதரவு அளிப்போம்.
டி.ராஜேந்தர் அவர்களின் இந்த உருக்கமான தத்துவப் பாடலும், ரசிகர் மன்றத்தின் இந்த அறப்பணியும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
