காணாமல் போன தாயை மீட்டு வரச் செல்லும் மகன்களின் பயணத்தில் கிளறி விடப்படும் நினைவுகளும், பிரிந்து போன உறவுகளின் மீட்டெடுப்பும் தான் இந்த ‘J.பேபி’.
மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊர்வசி தொலைந்து போகிறார். தாய் தொலைந்தது கூட தெரியாத மகன்கள் தினேஷ், மாறன் இருவருக்கும் காவல் துறை அழைத்துச் சொல்லும்போதுதான் தாய் தொலைந்து போனதே தெரிய வருகிறது.
உடனே புறப்பட்டு தாயை மீட்டுக் கொண்டுவர, மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் அவர்களுக்கு அங்கிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உதவுகிறார். குடும்ப பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருக்கும் தினேஷ், மாறனை இந்தப் பயணம் என்னவாக மாற்றியது? தாய் மீட்கப்பட்டாரா, இல்லையா என்பது உணர்வுக் களமான திரைக்கதை.
இது உண்மை சம்பவம் என்பதால் காட்சிகள் நிஜமாகவே உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. அதற்காக இயக்குனர் சுரேஷ்மாரிக்கு முதலிலேயே ஒரு சிறப்பு வந்தனம்.
பேபியம்மா போன்ற அம்மாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள், ஆனால் அவர்களை பிள்ளைகள் ‘பெரிசு தானே…’என கண்டு கொள்ளாத சூழலில், அந்த அம்மாக்களின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஏக்கம் எல்லாம் எப்படி பிள்ளைகள் மூலம் கவனிக்கப்பட வேண்டும் என்பதை மனதில் ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள்.
பேபியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை நடிப்பில் அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். “நானா நைனா உன்ன அடிச்சேன், நீ தானே அடிச்சே” என்று அப்பாவித்தனமாக தனது பிள்ளையிடம் கேட்டுவிட்டு, அடுத்த நொடியில் “நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல நைனா, என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்” என்று கண் கலங்கும் காட்சியில் நிஜமாகவே இவர் நடிப்பு ராட்சசி. பேபியம்மா, உங்களுக்கு ‘தேசிய விருது’ நிச்சயம்.
இதுவரை நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட மாறனுக்கு இந்தப்படத்தில் மாறுபட்ட வேடம். அதை நிறைவாகச்செய்து குணச்சித்திரப்பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் தினேஷ், இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக வந்தாலும் அந்த பாத்திரத்திலும் பளபளக்கிறார். ஊர்வசியின் மகள்களாக நடித்திருக்கும் மெலடி டார்கஸ், தாட்சாயிணி ஆகியோரும் மருமகள்களாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சபீதா ராய் ஆகியோரும் கேரக்டர்களாகவே மாறி சிறப்பு சேர்க்கிறார்கள்.
வட்டிக் கடைக்காரராக சிறு வேடத்தில் வந்தாலும் கவிதாபாரதி கவனம் பெறுகிறார்.
இயக்குனரின் பெரியம்மா வாழ்வில் நடந்த கதை என்பதால், அப்போது அந்த அம்மாவை காப்பாற்ற காரணமாக இருந்த ராணுவ வீரர் சேகர் நாராயணனையே படத்திலும் அதே சம்பவத்தில் இடம் பெற வைத்திருப்பது காட்சியோடு நம்மை இன்னும் நெருக்கமாக்கி விடுகிறது. டோனிபிரிட்டோவின் இசையில் பாடல்கள் சுகராகம்.
ஜெயந்த் சேதுமாதவனின் கேமரா கதை தொடங்கியதுமே நம்மையும் கையைப் பிடித்து காட்சிக்குள் கூட்டிப் போய் விடுகிறது.
தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை தேர்ந்த திரைமொழியில் எழுதி பார்ப்போரை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்மாரி.