பிரேமலு திரை விமர்சனம்

நாயகன் நஸ்லென் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். 4 வருட படிப்பு முடிந்து காதலை சொல்லப்போகும்போது தன் மானசீக காதலி இன்னொருவனின் காதலியானது தெரிய வர, அதிர்கிறார்.

அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. இதனால், தனது நண்பன் அழைப்பின்பேரில் ஒரு கோர்ஸ் படிக்க ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வில் நாயகி மமீதா பைஜுவை சந்திக்க, பார்த்ததுமே காதல் பீறிடுகிறது. அதனால் சென்னைக்கு போக நினைத்த நாயகன், காதலுக்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார்.

தனது காதலை நாயகியின் தோழியிடம் நஸ்லென் தெரிவிக்க, அவரோ ”மமீதா எதிர்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடம் இல்லை, அதனால் உன் காதலை அவர் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டாள்”என்று வார்த்தைகளால் நெஞ்சில் ஆணி பாய்ச்ச, அலுவலக நண்பரான ஷ்யாம் மோகனும், மமீதாவும் நட்பில் இருப்பதாகவும் நாளடைவில் அது காதலானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்.

இதனை கேட்ட பிறகும் மமீதா மீதான நட்பை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தனது காதலை நஸ்லேன் சொல்கிறார். இந்த காதலாவது கரையேறியதா? என்பது இளமையும் புதுமையுமான திரைக்கதை.

மலையாளப் படம் என்றாலும், கதை ஐதராபாத்தில் நடப்பதால் ‘பிரேமலு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் போலும்.. ஐதராபாத்தில் கதை நடந்தாலும், அது தென்னிந்தியா முழுவதும் பொருந்திப்போகும் கதைக்களத்தில் படம் நிற்கிறது.

நாயகனாக நஸ்லென் நல்வரவு. அப்பாவித்தனம், குறும்பு நக்கல் நையாண்டி, காதலில் பிடிவாதம் என அத்தனை அம்சங்களிலும் அசத்தி விடுகிறார். ரெயிலில் பயணிக்கும் மமிதாவுக்கு வயிற்று வலிக்கு மருந்து தேடி வந்து கொடுத்து அதே ரெயிலில் அவருடன் பயணிக்கும் காட்சியில் காதலின் மென்மையை அவர் வெளிப்படுத்தும் இடம் அத்தனை அழகு.

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜு ஒரு அழகான ஆச்சரியம். வசன உச்சரிப்பு, உடல்மொழி, நஸ்லென் உடனான நட்பை கையாள்வது, தன்னை காதலில் மடக்க நினைக்கும் சீனியர் ஆபீசரிடம் காட்டும் ஆவேசம் என அத்தனையிலும் அம்மணி காட்டுவது நவரசம். இந்திய சினிமாவில் இவருக்கு நிலையான இடம் நிச்சயம்.

நாயகனின் நண்பனாக வரும் சங்கீத் பிரதாப், தனது டைமிங் காமெடி மூலம் கவர, நாயகனின் காதலுக்கு வில்லனாக வரும் ஷ்யாம் மோகன் இன்னொரு கோணத்தில் ஈர்க்கிறார்.

நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடித்திருக்கும் சமீர் கான், அல்தாப் சலீம் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா ஐதராபாத்தை இன்னும்அழகாக காட்ட, விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்கள் தாளமிட வைக்க, இயக்கிய கிரிஷ் நம் இதயத்தில் வரைந்திருப்பது அழகான காதல் ஒவியம்.
பிரேமலு, பிரமிப்பு.