Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘இரவின் கண்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் பாப் சுரேஷே நாயகனாகவும் நடிக்கிறார். டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.
ஒளிப்பதிவு – கீதா கரண், இசை – சார்லஸ் தனா, படத்தொகுப்பு – இமான், பாடல்கள் – மூர்த்தி, பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை – பாலசுப்ரமணியம் K. G., திரைக்கதை, இயக்கம் – பாப் சுரேஷ்.
செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் இந்த ‘இரவின் கண்கள்’ படம் உருவாகியுள்ளது.
படம் பற்றி இயக்குநர் பாப் சுரேஷ் பேசும்போது, “இந்தப் படம் IT-யில் பணிபுரியும் விக்டர் என்பவனுக்கும், அவன் வைத்திருக்கும் IRIS(Amazon Alexa போன்று) எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் உள்ள நட்பை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
விக்டர் கல்யாணம் ஆனவன். பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் வைத்திருக்கும் IRIS எனும் கருவி ஒரு விபத்திற்கு பின் வித்தியாசமாக நடந்து கொள்கிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் அதை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், விக்டர் எதிர்பாராதவிதமாக ஒரு சண்டையில் சம்பந்தமாகி கொலைக் குற்றவாளியாகிறான்.
அந்த கொலை குற்றத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் விழிக்கும் விக்டரை IRIS காப்பாற்றியதா, இல்லையா என்பதுதான் மீதிக் கதை. ரசிகர்களுக்கு ஒவ்வொரு காட்சிகளும் புதுவிதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்..” என்றார் இயக்குநர் பாப் சுரேஷ்.
இந்த படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் வரும் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது .