தமிழில் நடிக்க கதை கேட்கும் விஜயதேவரகொண்டா

விஜய தேவரகொண்டா, மிருணாள் தாக்குர் ஜோடி நடிப்பில் உ ருவாகி இருக்கும் தெலுங்கு படம், ‘தி ஃபேமிலி ஸ்டார்’. மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். ஏப்.5-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழிலும் வெளியாவதையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் விஜய் தேவரகொண்டா பேசுகையில், ‘‘நான் நடித்த ‘குஷி’ படத்துக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலும் நன்றாக இருந்தது. இப்போது ‘ஃபேமிலி ஸ்டார்’ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறேன். இது பொருளாதார ரீதியாக தன் குடும்பத்தை உயர்த்த நினைக்கும் ஓர் இளைஞனின் கதையை கொண்ட படம். ஆனால், எல்லாவற்றிலும் அவன் தீவிரமான இளைஞனாக இருப்பான். இதில் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் இருக்கிறது.

எனது அடுத்த படம் ஆக்ஷன் கதையை கொண்ட படமாக இருக்கும். சில தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறேன். அவர்கள் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

தெலுங்கில் என் அடுத்த படத்தை கவுதம் தின்னூரி இயக்குகிறார். அதில் தமிழ் நடிகர்கள் அதிகமாக நடிக்கிறார்கள். தமிழில் என் வயசுக்கேற்ற, ஜாலியான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாக இருக்கும். பரசுராம் இயக்கிய ‘கீத கோவிந்தம்’ படத்தில் நானும், ரஷ்மிகா மந்தனாவும் நடித்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் இல்லாததைப் பற்றி செட்டில் பேசிக்கொண்டோம். நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் சேர்ந்து நடிப்போம்’’ என்றார்.