ஆலகாலம் என்பது கொடிய நஞ்சு. அதைத் தலைப்பில் வைத்து மதுவுக்கு எதிராக புதுமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா ஆடியிருக்கும் ருத்ர தாண்டவமே படம். நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாமே இந்த ஜெயகிருஷ்ணா தான்.
விஷ சாராயத்துக்கு கணவன் பலியாக, மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நாயகனின் தாய் பட்டணத்துக்கு பொறியியல் கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார்.
ஜெய கிருஷ்ணாவும் நன்றாக படிக்கிறார். அவரது நற்குணம் சக மாணவிக்கு அவர் மேல் ஈர்ப்பு ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் இருபக்கமும் பற்றிக் கொள்கிறது, காதல். ஒரு கட்டத்தில்அம்மாவுக்கு சொல்லாமலே கல்யாணமும் ஆகிறது.
இதன்பிறகு தந்தை போலவே மகனுக்குள்ளும் மது புகுந்து கொள்ள, இதனால் படிப்பு போய், கவுரவம் போய், காலும் போய் அந்த மகனின் நிலை தாய்க்குத் தெரியவரும்போது என்னாகிறது என்பது பதைபதைப்பான கிளைமாக்ஸ்.
கள்ளமில்லா வெள்ளை மனத்தானாக வரும் ஜெயகிருஷ்ணா ஆரம்பம் முதலே நடிப்பில் கவர்ந்து விடுகிறார், நாயகி சாந்தினியுடனான காதலிலும் கணிசமான தேர்ச்சி. எப்போது மதுவை தொட்டாரோ அப்போதில் இருந்து அவர் நடிப்பு வேறு லெவல். தன்னுடைய நிலை அம்மாவுக்கு தெரியக்கூடாது. காதலித்த மனைவியை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கனவெல்லாம் குடியால் சிதறுகிறது. அதன் விளைவாக ஒரு காலையும் இழந்து காதல் மனைவிக்கு தாங்க முடியாத சோகத்தையும் தரும் இடத்தில் ‘என்னவொரு நடிகனடா’ என்று வியக்கத் தோன்றுகிறது. அவருடைய நடிப்புக்கும் இயக்கத்துக்கும் விருதுகள் நிச்சயம்.
காதலித்தவனையே கணவனாக அடைய வசதியான வாழ்வைத் துறந்து வரும் சாந்தினி அந்த கேரக்டரில் பலமாக காலூன்றி விடுகிறார்.வறுமை ஆட்கொள்ள, கர்ப்பிணியான நிலையில் கணவனும் தன் கஷ்டம் உணராத குடி நோயாளியாக மாறிப் போக, எதிர்கால பயத்தை நடிப்பில்கொண்டு வரும சாந்தினிக்கு இந்த கேரக்டரும் நடிப்பும் மைல்கல்.
நாயகனின் அம்மா ஈஸ்வரி ராவ் அந்த அப்பாவி அம்மா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். மகனைத் தேடிப் போகும்போது அவன் குப்பை மேட்டில் ஒரு கால் இல்லாமல் ஈக்கள் மொய்க்க கிடப்பதைப் பார்த்தால் பதறும் ஒரு தாயை நீங்கள் திரையில் அச்சு அசலாக காண முடியும். உணர முடியும். வெல்டன் ஈஸ்வரி. கிளைமாக்சில் இவர் எடுத்திருப்பது இன்னொரு அவதாரம்.
தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
கா.சத்தியராஜின் ஒளிப்பதிவும் என்.ஆர்.ரகுநந்தனின் ஒளிப்பதிவும் படத்தின் இன்னபிற பலம். மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு இன்னொரு பலம். இதுபோன்ற சமூக சீர்திருத்த படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதுடன் படைப்பாளிகள் கொண்டாடப்படவும் வேண்டும்.
இந்த ஆலகாலம், திரைக்கு கிடைத்த அமுதம்.