ரஜினியை டென்ஷனாக்கிய வேட்டையன் பட டைரக்டர்

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு இசை அனிருத். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏப்ரல் ஏழாம்தேதியன்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பே வெளியானதற்குப் பின்னால் ஒரு கிளைக்கதை இருக்கிறது என்கிறார்கள்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்கவேண்டும் என்று ரஜினியும் கட்டளையிட்டிருக்கிறாராம்.

ஏற்கெனவே, இந்தப்படத்தின் இயக்குனர் ஞானவேலுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தொடர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், படப்பிடிப்புத் தளத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட பல விஷயங்களில் பெரிய பட்ஜெட் வைத்ததாம் படக்குழு. அது திட்டமிட்டதை விட பலமடங்கு செலவு வைக்கும் என்பதால் அவற்றை ஏற்க முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் மறுக்கவே, ஒருவழியாக இரு தரப்பும் ஒருவழியாக உடன்பாட்டுக்கு வந்து, படப்பிடிப்பு தொடங்கியதே திட்டமிட்டதை விட லேட் என்கிறார்கள். இப்போது ரஜினியும் படப்பிடிப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால், இன்னும் அறுபது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று படக்குழு சொன்னதாம். இதைக் கேட்டு ரஜினி மற்றும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ஆகிய இருவருமே அதிர்ச்சி அடைந்தார்களாம்.

இதுவரை சுமார் எண்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்னும் அறுபது நாட்கள் என்றால் மொத்தம் நூற்று நாற்பது நாட்கள் ஆகும்.

படம் தொடங்கும்போது சுமார் நூறு நாட்களில் மொத்தப்படமும் முடிந்து விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் படிப்படியாக நாட்கள் அதிகரித்ததில் ஏற்கனவே தயாரிப்பு தரப்புக்கு ஞானவேல் மீது கோபம். இப்போது மேலும தேதிகள் வேண்டும்என்றதில் ரஜினிக்கும் வந்ததே கோபம்.

வேட்டையன் படத்துக்கு அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.அந்தப்படங்களுக்கு உத்தேசமாக தேதிகள் சொல்லியிருக்கும் நிலையில், அந்த தேதிகளை இவர்களுக்கு தர வேண்டிய நிர்ப்பந்தம் ரஜினிக்கு.

இதனால்தான் அவர் டைரக்டர் ஞானவேல் மீது கோபமாகி ‘சரியாகத் திட்டமிடுங்கள். அதற்கு மேல் தேதிகள் கேட்டால் என்னால் தரமுடியாது’ என்று கண்டப்பாக சொல்லி விட்டாராம்.அதோடு, வெளியீட்டுத் தேதி குறித்து முடிவு செய்து அவர்களை வேகப்படுத்துங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடமும் அவர் சொல்லி விட தயாரிப்பு தரப்பு தரும் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறார், ஞானவேல். இதனால் தான் இப்போதே பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகக் காரணம் என்கிறார்கள்.

இதன்பிறகாவது ஞானவேல் சரியாக திட்டமிடுவாரா என்பது தான் தயாரிப்பு தரப்பின் எதிர்பார்ப்பாம், இப்போது.