லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171-வது படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதே பெயரில் சிலஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் நடித்திருந்தார். இந்த புதிய கூலி படத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
3.16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், தங்க கட்டிகளையும், நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது. கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி உள்ளே வருகிறார். தங்க நகைகள் மட்டும் கலரிலும், மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.