எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாக இருக்கிறார், ரத்னம் (விஷால்). அந்த ஊருக்கு வரும் மல்லிகாவை (பிரியா பவானி சங்கர்) ஒரு ரவுடிக் கும்பல் கொல்ல முயல, அவரைக் காப்பற்றுகிறார் விஷால்.
பிரியாவைக் கொலை செய்ய முயற்சிப்பது ஆந்திரா – தமிழ்நாடு எல்லையான நகரியில் அடாவடி செய்து கொண்டிருக்கும் முரளி சர்மா, ஹரீஸ் பெரேடி, வேட்டை முத்துக்குமார் கோஷ்டி.). இவர்கள் பிரியாவை ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள்? அவர்களிடமிருந்து பிரியாவை, விஷால் ஏன் காப்பாற்றத் துடிக்கிறார் என்பது பரபர திரைக்கதை.
ரவுடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். ஆனால், அந்தக் கதையை, ஒரு பெண்ணைச் சுற்றி நகர்வதுபோல படமாக்கி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார், டைரக்டர் ஹரி.
சமுத்திரக்கனியின் அரவணைப்பில் அடாவடி, அடிதடி என்றிருக்கும் விஷால், பிரியாவைப் பார்த்ததும் அவரை போலோ பண்ணத் தொடங்குவதற்குப் பின்னணியில் வைத்திருக்கும் திருப்பம் தான் படத்தின் ஜீவன். நிமிர்ந்து உட்கார வைக்கும் இந்த திருப்புமுனைக் காட்சி, பின்னர் வில்லன் கோஷ்டிக்கும் – விஷாலுக்குமான மோதலாக தெறிக்கிறது..
அந்த ரத்னம் கதாபாத்திரத்தில் விஷால் கச்சிதம். உயரமும், உடற்கட்டும் அந்த ரவுடி கேரக்டருக்கு சாலப்பொருத்தமாகிறது.
பிரியா பவானி சங்கர் தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் திரைஆளுமை அதிகம் வில்லன்களாக வரும் முரளி சர்மா, ஹரீஸ் பெரேடி, வேட்டை முத்துக்குமார் மிரட்டுகிறார்கள்.. யோகிபாபு சிரிக்க வைக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் கவுதம் மேனன் தன்இருப்பை பதிவு செய்து விடுகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஓ.கே, பின்னணி இசை டபுள் ஓகே. சுகுமார் ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் அபாரம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘ரத்னம்’ நவரத்னமாய் ஜொலித்திருக்கும்.