படிக்காத பக்கங்கள் திரை விமர்சனம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை இன்னொரு கோணத்தில் சொல்லியிருப்பதே இந்த ‘படிக்காத பக்கங்கள்.’

பத்திரிகையாளர் என சொல்லிக் கொண்டு நடிகை ஸ்ரீஜாவை சந்திக்கும் அந்த நபர், நடிகையை பாலியல் உறவுக்கு அழைத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் ஆத்திரமாகும் நடிகை அவரை அடித்து வீழ்த்துகிறார். அந்த நபர் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிற எம்.எல்.ஏ.வின் கையாள் என்பதும், அவர்களால் ஏகப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் எப்பதும் பின்வரும் திரைக்கதையின் பலமாகி நிற்கிறது.

குற்றவாளிகளை தண்டிக்க நடிகையே களமிறங்குவதும் அதில் அவர் சந்திக்கும் சவால்களையும் டெம்போ குறையாமல் இயக்கி இருக்கிறார், செல்வம் மாதப்பன்.

நடிகை ஸ்ரீஜாவாக வருகிற யாஷிகா ஆனந்துக்கு நடிப்பை விடவும் அதிரடி நன்றாக வருகிறது. கவர்ச்சியிலும் மனசை கலங்கடிக்கிறார்.

யாஷிகாவுக்கு தங்கையாக வருகிற தர்ஷினிக்கு நடிக்கவும் வாய்ப்பு. காதலித்த இளைஞனால் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி பலியாகி அனுதாபம் அள்ளிக் கொள்கிறார்.

எம்.எல்.ஏ.வின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கிற முத்துக்குமார் வில்லன் நடிப்பில் பால பாடம் தான் தெரிகிறது. நடிப்பில் இன்னும் அவர் பல படி ஏற வேண்டும்.

இடைவேளைக்கு முன் வந்து காட்சி கொடுக்கிறபிரஜன் அந்த போலீஸ் அதிகார கேரக்டரில் அழுத்தமாய் பதிகிறார்.

ஜெஸி கிப்டின் பின்னணி இசை படத்தின் இன்னொரு பலமாகி நிற்கிறது.

படிக்காத பக்கங்கள் – படிக்க வேண்டிய பாடங்கள்.