தண்டுபாளையம் திரை விமர்சனம்

கர்நாடகாவில் ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள கிராமம் தண்டுபாளையம். கர்நாடகத்தில் வாழ்ந்து கன்னடம் பேசினாலும் இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். பரம்பரை பரம்பரையாக கொலை கொள்ளையே இவர்களின் தொழிலாகவும் மாறிப் போனது. வீடு புகுந்து அவர்கள் நடத்தும் கொள்ளையின்போது. குழந்தைகள், முதியோர்களை கொடூரமாக கொலை செய்யவும் தயங்காதவர்கள். இந்த கொள்ளையின்போது இளம்பெண்கள் சிக்கினால் கூட்டுக் கற்பழிப்பு செய்து கொல்லவும் தயங்காதவர்கள் .

இந்த கொடூர கூட்டத்தை துடிப்பான போலீஸ் அதிகாரி ஒருவர் கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார்.

மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் பரபர திரைக்கதை.

ஏற்கனவே கன்னடத்தில் படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் திரைக்கு வந்திருக்கிறது.தமிழில் போனசாக சோனியா அகர்வால், வனிதா ஆகியோர் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் நடித்த காட்சிகளை புதிதாக படமாக்கி தண்டுபாளையம் படக் கதையோடு இணைத்ததில் திகிலும் கூடிப்போகிறது.

சோனியா அகர்வாலும் வனிதாவும் கொள்ளை நடத்தும் வீட்டுக்குள் இடது காலை தூக்கி வைக்கும்போதே மனம் பகீரென்றாகி விடுகிறது. கொலை செய்து விட்டு சாவகாசமாக இவர்கள் சுருட்டு புகைக்கும் காட்சியில் ஈரக்குலை நடுங்கி விடும். மேலதிகாரி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராயல் பிரபாகரை வனிதா கழுத்தறுக்கும் அந்த தொடக்கமே பயத்தில் ஜில்லிட வைத்து விடுகிறது.

கூட்டத்தோடு வீட்டுக்குள் நுழையும் சுமா, பூஜா இருவரும் அங்கு இருக்கும் நகைகளையும் பொருட்களையும் கொள்ளை அடிப்பது அதேசமயம் உடன்வரும் ஆட்கள் அங்கிருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்வது என்று சகட்டுமேனிக்கு ரத்தக்களரி காட்சிகள் படம் நெடுக பயப் பந்தை மனதுக்குள் உருட்டி விளையாடுகின்றன.

சுமா ரங்கநாத் பூஜா காந்தி இருவரும் ரவுடித்தனத்தை அரங்கேற்றும் இடங்கள் வன்முறையின் உச்சம். இவர்களுடன் வரும் அடியாட்கள் பலாத்காரத்தை பலகாரம் போல் அணுகும் இடங்கள் நெஞ்சுக்குள் அடிக்கப்படும் ஆணி.

போலீஸ் அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் நடிப்பில் அதிரடி காட்டுகிறார். சுமா ரங்கநாத்தின் ரவுடி கூட்டத்தை துரத்தி சென்று அவர்களை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளும் இடத்தில், இவரின் அந்த ஆக்ரோஷம் சபாஷ் போட வைக்கிறது. முமைத்கான் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.

டைகர் வெங்கட் தயாரிக்க அவருடன் இணைந்து கே டி நாயக் படத்தை இயக்கியிருக்கிறார். கொலை கொள்ளை மயமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது மக்களுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.அநத வேலைக்காரியின் பயந்த கண்கள் வழியாகவே அடுத்து நடக்கப் போகும் விபரீதம் தெரிந்து விடுகிறது.

ஜித்தன் கே ரோஷனின் இசையும் பி இளங்கோவனின் கேமராவும் திகில் கதைக்குள் இணைந்த திகில்.
வன்முறை மூலம் எச்சரிக்கை மணி அடித்த விதத்தில், படம் இத்தனை களேபரத்திலும் தவிர்க்க முடியாத படமாகி விடுகிறது.