மகளின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை தேடிச் செல்லும் நாயகன் மோகனுக்கு சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான குற்ற செயல் களின் பின்னணி பற்றி தெரிய வருகிறது. அதனை நோக்கி பயணிப்பவர், தனது மகளின் மரணத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார். மகளின் மரணத்திற்கு மட்டும் இன்றி சமூகத்திற்காகவும் அவர்களை களை எடுக்க அதிரடியாக இறங்கும் மோகன், அவர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கிறார், அவர்கள் யார்? என்பதை சொல்வது தான் ‘ஹரா’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன். மகிழ்ச்சிக்குரிய இந்த மறு வரவில் தனது வயதுக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் என்பது சிறப்பு. காணாமல் போன மகள் பற்றி விசாரிக்க விசாரிக்க புதுப்புது தகவல்கள் கிளம்ப, அந்த பதற்றத்தை அவர் கண்களே காட்டி விடுகிறது. ‘மகள் இனி அவ்வளவு தானோ’ என்ற சோகத்தில் பஸ்சுக்குள் அவர் உடைந்து அழும் காட்சியில் மோகனல்ல, பறி போன மகளின் தந்தை தான் தெரிகிறார்.
மோகனின் மனைவியாக அனுமோல், மகளாக நடித்திருக்கும் சுவாதி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அமைச்சராக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், முதலமைச்சராக நடித்திருக்கும் பழ.கருப்பையா, வில்லி அனிதா நாயர் என அவரவர் கேரக்டர்களில் பொருந்திப்போவது கதை மீது கண் பதிக்க வைக்கிறது.
இளம் நாயகர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் சந்தோஷ் பிரபாகர் மற்றும் கெளசிக் ராம் இருவரும், நாயகன் மோகனுக்கு மட்டும் இன்றி படத்திற்கும் பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள். சந்தோஷ் பிரபாகர் காதல் காட்சிகளில் முதல் படத்திலேயே பாசாகி விடுகிறார். மோகனால் உயிர் போவது நிச்சயம் என்ற நிலையில் அந்த மரணபயம் கண்ணில்தெரியும் நடிப்பு திரையுலகுக்கு ஒரு சரியான நடிகனை அடையாளம் காட்டியிருக்கிறது
யோகிபாபு வக்கீலாக வந்த சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் கடுப்பேற்றி விடுகிறார். அவ்வப்போது அட்வைஸ் திலகமாக வந்து போகிறார் சிங்கம்புலி. இவர்களை விட மொட்டைராஜேந்திரன் ஒருபடி மேலாக அதிரடி கமெண்ட்களில் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் பிரகாஷ் முனுசாமி, மோகன் குமார் மற்றும் விஜய் ஸ்ரீ ஜி ஆகியோரது ஒளிப்பதிவும், ராஷாந்த் அர்வினின் இசையும் பாராட்டும்படி இல்லையென்றாலும் பழுதில்லை.
எழுதி இயக்கியிருக்கும் விஜய்ஸ்ரீஜி, மகளின் மர்ம மரணத்தில் தொடங்கி பயணப்படும் தந்தையின் கதைக்களத்தில் போலி மாத்திரை உள்ளிட்ட பல விஷயங்களை தொட்டுச் செல்வது கதையின் நேர்போக்கை விட்டு விலகி அயர்ச்சி கொடுக்கிறது. வெள்ளிவிழா நாயகன் மோகனின் மறுபிரவேசம் என்னும்போது கொண்டாடுகிற மாதிரி ஒரு கதையை தேர்வு செய்திருக்கலாமே… திருவிழா கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டாமா?
என்றாலும் மோகனுக்காக ஒருமுறை திரை வலம் வரலாம்.