ராஜா வீட்டு கன்னுக்குட்டி — திரை விமர்சனம் 

புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கிராமத்து காதல் கதை. அதை உணர்வு குறையாமல் கிளைமாக்ஸ் வரை சொல்லி இருக்கிறார்கள்.

 செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் ஆதிக் சிலம்பரசன் தனது ஊரில்

பால்கார பெண் காயத்ரி ரெமாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு ஆதிக் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்ப, கோபத்தில் நாயகன் சிங்கப்பூருக்கு போய் விடுகிறார்.

அங்கிருந்து 10 ஆண்டுகள் கழித்து திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையே , காயத்ரி ரெமாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விடுகிறது.

மீண்டும் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நாயகனுக்கு தன் காதலி இப்போது இன்னொருவர் மனைவி என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

 இந்நிலையில் தன் நண்பனின் வாழ்க்கை இப்படியே போய் விடக்கூடாது என்று எண்ணும் உயிர் நண்பன் தனது தங்கையை நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

 பழசெல்லாம் மறந்து மனைவியை நேசிக்கிறான் நாயகன். மனைவி தாய்மை அடைகிறாள்.

இதற்கிடையே, ஆதிக் சிலம்பரசன் மூலம் அவரது முன்னாள் காதலி காயத்ரி ரெமாவுக்கு ஒரு குழந்தை பிறந்த உண்மை நாயகனின் மனைவிக்கு தெரிய வர, நிறைமாத கர்ப்பிணியான அவள் என்ன முடிவெடுத்தாள்? காதலியை கைவிட்ட குற்ற உணர்ச்சியில் நாயகன் தன் மூலம் அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதை அறிந்து என்ன செய்தான்? முன்னாள் காதலியை அவன் சந்தித்தானா… என்பது மீதிக்கதை.

நாயகனாக அறிமுக நடிகர் ஆதிக் சிலம்பரசன் வருகிறார். கிராமத்துப் பெண் காயத்ரி ரெமாவுடனான அவரது காதலில் மண் வாசனை அதிகம். பால்காரி என்று நண்பர்களால் உதாசீனம் செய்யப்பட்ட காயத்ரியை குறும்பு கலந்த அன்புடன் அவர் அணுகும் விதமே அந்த கேரக்டருக்கு அழகு சேர்க்கிறது. காதலியின் குடும்பத்தில் நடந்த துயரத்தில் துவண்டு போகும்போது

தனக்கு நடிக்கவும் வரும் என்பதை நிரூபிக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் தம்பி சிவன், படத்தின் இன்னொரு நாயகனாகவே வலம் வருகிறார். நண்பனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத கேரக்டரை அனுபவித்து செய்திருக்கிறார்.

ஆதிக் சிலம்பரசனின் காதலியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, மனைவியாக வரும் வர்ஷிதா இருவருமே பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். தம்பி சிவனுக்கு ஜோடியான அனு கிருஷ்ணாவும் இயல்பான நடிப்பில் பிரகாசிக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி சரத் மற்றும் அவரது நண்பர்கள் வரும் காட்சிகள் படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம்.

 டைசன் ராஜ் இசையில், “கற்கண்டு மழையே மழையே…” பாடலில் நிஜமாகவே கற்கண்டின் இனிப்பு.

ஒளிப்பதிவாளர் ஹரிகாந்த்த்தின் கேமரா கிராமத்து கதைக்களத்தை

யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஏ.பி.ராஜீவ், ஒரு கிராமத்து காதல் கதைக்குள் சந்தோஷம், சோகம் என்று இயல்பாக கதை சொல்லி இருக்கிறார். ஒரு சோக சூழலில் முன்னாள் காதலியை நாயகன் எதிர் பாராமல் எதிர்பாராமல் சந்திக்கும் காட்சி, இயக்குனரின் உயிர்ப்பான இயக்கத்துக்கு சாட்சி. கிளைமாக்ஸ் எதிர்பாராத

நெகிழ்ச்சி.

மொத்தத்தில், ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி’யில் இருப்பது ஜீவனுள்ள கிராமத்து காதல்.