அப்பாவி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் நாயகன் நட்டி நட்ராஜ், பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றி காட்டுப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கிறார். போலீஸ் அவரை கைது செய்கிறது. கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதி க்கிறது. சிறை வாழ்க்கை முடிந்து வெளியே வரும் நட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தை அரசியல்வாதி ஒருவர் ஆட்டைய போட்டு அப்படியே கோவில் ஒன்றையும் கட்டி விடுகிறார்.
இப்போது வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொள்கிறார்.
சாமியாராக இருந்து கொண்டே வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் நட்டிக்கு இது மாதிரியான கதாபாத்திரங்கள் என்றால் அல்வா சாப்பிடற மாதிரி. கலகல நடிப்பில் அந்த அல்வாவை நமக்கும் ஊட்டி விடுகிறார். நடிக்கும் வாய்ப்பை விட, பேசும் வாய்ப்பு அதிகம். அதிலும் ரசிக்க வைக்கிறார்.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி, காதலில் பாஸ் மார்க். சண்டைக் காட்சிகளில் வேகம்.
நட்டி ஜோடியாக வரும் ஸ்ரீரஞ்சனி அழகாக இருக்கிறார்
நடிப்பும் வருகிறது. முகேஷ் ரவியின் ஜோடி ஷாலினி காதல் காட்சிகளில் தாராளம் காட்டியிருக்கிறார்.
நட்டியின் சீடராக வரும் சிங்கம் புலிக்கு நீண்ட நாளைக்கு பிறகு படம் முழுக்க சிரிக்க வைக்கும் கதாபாத்திரம். அவரும் அதை உணர்ந்து நன்றாகவே சிரிக்க வைக்கிறார். நிறைய மனைவிகளை வைத்துக் கொண்டு குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கும் முல்லை கோதண்டம், வரும் கொஞ்ச நேரத்திலும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார். முருகானந்தம், சாம்ஸ் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷின் கேமரா காட்சிகளை கண்களுக்குள் நிறைவாக்க,
இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியிருக்கும் தா.முருகானந்தம் வார்த்தை
ஜாலங்களில் நகைச்சுவை தெறிக் கிறது.
ராஜநாதன் பெரியசாமி இயக்கியிருக்கிறார். நட்டியின் சாமியார் வேடம் நித்யானந்தாவை நினைவுபடுத்துகிறது. அதற்கேற்ப பொய்லாசா என்கிற தீவுக்கு அவர் அதிபதியாவது போல் கிளைமாக்ஸ் வைத்திருப்பது அதை உறுதி செய்கிறது. நகைச்சுவையே பிரதானம் என்பதால் லாஜிக் மறந்து சிரிக்கலாம்.
