கும்கி -2 -திரை விமர்சனம்

மலைக் கிராமத்தில் வாழும் மதி, தனது சிறுவயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அது முதல் இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள். படிக்கும் பள்ளியில் நண்பர்களே இல்லாத மதிக்கு யானையின் நட்பு பொக்கிஷமாக தெரிகிறது. யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. படிப்பை நிறுத்திவிட்டு யானையை தேடி அலையும் மதியை அவரது ஆரம்ப பள்ளி ஆசிரியர் திருச்செல்வம் அமைதிப்படுத்துகிறார். உனது உண்மையான அன்புக்கு அந்த யானை நிச்சயம் உன்னை தேடி வரும். அதனால் கல்லூரி படிப்பை தொடரும் வழியைப் பார் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.

கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊர் வருகிறார். அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்க, அந்த தகவலை வைத்து யானையை தேடிச் செல்கிறார்.

மதிக்கு அவரது யானை கிடைத்ததா ?, யானை மாயமானதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தான் ‘கும்கி 2’.

நாயகனாக வரும் அறிமுக நடிகர் மதி, ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, தன்னிடம் இருந்து யானையை பிரிக்க நினைப்பவர்கள் மீது கோபம் கொள்வது என்று பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக நடிப்பில் வெளிப்படுத்துகிறார்

நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ் கிளைமாக்சில் ஒரு சின்ன திருப்ப த்துக்கு உதவுகிறார். நாயகன் மீது அக்கறை கொண்ட பள்ளி ஆசிரியராக திருச்செல்வம் இயல்பான நடிப்பில் மனதில் பதிகிறார். நண்பராக ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக ஹரிஷ் பெராடி, ஆட்சியை பிடிக்கத் துடிப்பவராக பிளாரன்ட் பெரைரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் சுக ராகம் பின்னணி இசை காட்சிகளின் தரத்தை இதயம் வரை இடம் பெயர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா, காடு மேடு என சகட்டுமேனிக்கு சுற்றி மலைகளையும், அருவிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் பிரபு சாலமனுக்கு காடும் யானையும் புதிதல்ல.

ஆட்சிக்கு வர யானையை பலி கொடுக்க துணியும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் திக் திக் ரகம். பார்வையாளர்களுக்கு இந்த கதை புதிதல்ல. இதே பாணியிலான இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்த போதிலும் பிரபு சாலமனின் டச் படத்தை ரசனை க்குரியதாக்கி விடுகிறது.

கும்கி முதல் பாகத்தில் ஒரு அழகான காதல் இருந்தது. இரண்டாம் பாகத்தில் அது மட்டும் மிஸ்ஸிங்.