கிராமத்து வாழ்வி யல் கதைகள் மண் மணம் மாறாமல் திரை வடிவம் பெற்றுவிட்டால் அது சாகாவரம் பெற்ற படைப்பாகி விடும். அப்படி கிராமத்து விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை, போராட்டத்தை எந்த வித சமரசமும் இன்றி சொல்லி இருக்கும் படமே இந்த ஒண்டி முனியும் நல்ல பாடனும்.
கொங்கு வட்டாரத்தில் நல்ல பாடன் என்பது நல்ல உழைப்பாளி என்பதைக் குறிக்கும்.
கதையின் நாயகனான நல்ல பாடன் இந்த பட்டப்பெயருக்கு தகுதியான உழைப்பாளி.
இந்த நல்ல பாடனுக்கும் ஒரு சோதனை வருகிறது. ஒரு நாள் அவரது மகன் கிணற்றில் தவறி விழுந்து மூச்சுப் பேச்சற்ற நிலையில் மீட்கப்படுகிறான். தனது மகன் உயிர் பிழைக்க தங்கள் ஊர் காவல் தெய்வம் ஒண்டிமுனியை வேண்டுகிறார். மகன் பிழைத்தால் கிடாய் பலி கொடுப்பதாக பொருத்தனை செய்கிறார்.
அவரது வேண்டுதல் நிறைவேறி மகன் பிழைத்து விட, ஒரு கிடாக் குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார். கிடாவும், மகனும் ஆண்டுகளின் சுழற்சியில் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு மட்டும் தள்ளித் தள்ளி போகிறது.
காரணம், அந்த ஊரில் இருக்கும் இரண்டு பண்ணா டிகளும் தங்களுக்கு இடையே இருக்கும் தீராப் பகையால் கோவில் நிகழ்வுக்கு வராமல் இருப்பது தான்.
இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க நல்ல பாடன் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்கிறார். இதற்கிடையே அவரது மகள் சித்ராவுக்கு பேசிய நகையில் ஒரு பவுன் இன்னும் பெண்டிங்கில் இருப்பதால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறாள்.
இன்னொரு பக்கம் நல்ல பாடனின் மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டுக் கிடாயை உள்ளூர் கறிக்கடை வியாபாரிக்கு விற்று விடுகிறான்.
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், நல்ல பாடன் தனது வேண்டுதலை நிறைவேற்றி காவல் தெய்வத்திற்கு தனது ஆட்டுக் கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா ? என்பதை உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பதே படம்.
நல்லபாடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக யதார்த்தமாக நடித்திருக்கிறார். படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பரோட்டா முருகேசனுக்கு இந்த படம் நிச்சயம் விருது வரை பெற்றுத் தரும்.
பெரிய பண்ணா டியாக கார்த்திகேசன், சிறிய பண்ணாடியாக முருகன் இருவரும் தேர்ந்த நடிப்பில் தங்கள் பாத்திரங்களுக்கு பளபளப்பு கூட்டி இருக்கிறார்கள்
பரோட்டா முருகேசனின் மகனாக வரும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன் தமிழி னியன் , காமெடிக்கு விகடன், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். பின்னணி இசை மூலமாக காட்சிகளுக்கு தன் பங்காக
உயிரூட்டி இருக்கிறார். இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன்.
ஒளிப்பதிவாளர் விமலின் கேமரா கிராமத்தின் விஸ்தீ ரணங்களை கண் முன் நிறுத்துகிறது.
நல்ல பாடன் கதாபாத்திரம் மூலம் அந்த கிராமத்து மனிதர்களை அவர்களின் இயல்புகளை உயிர்ப்புடன் சொன்ன விதத்தில் இயக்குனர் சுகவனம் கவனம் பெறுகிறார்.
எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் மூலம் இன்ப அதிர்ச்சியும் தருகிறார். ( இவருக்கும் விருது காத்திருக்கு)
மொத்தத்தில் மண் மணக்கும் ஒரு மகோன்னாத படைப்பு.
