பாண்டிச்சேரியில் பெரிய தாதாவான சூப்பர் சுப்பராயன், புது ஏரியாவில் தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார். அவரை வெளியேற்ற நடந்த போராட்டத்தில் தலையில் அடிபட்டு உயிரை விட்டு விடுகிறார்.
தந்தை வீடு வராததை அறிந்து அதிர்ச்சி அடையும் அவரது மூத்த மகன் சுனில் தனது ரவுடி பட்டாளப் பரிவாரங்களுடன் தேடுதல் வேட்டையை தொடங்குகிறார். மறுபக்கம் உயிரிழந்த பெரிய தாதாவின் உடலை கைப்பற்றி அவரது தொழில் எதிரியிடம் ரூ.5 கோடி பெறுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது .
இதற்கிடையே, உடலை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷின் குடும்பம் பாடுபடும் போது, அவரால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தி சுரேஷை பழிவாங்கத் துடிக்கிறார்.
இப்படி பிணத்தின் பின்னாடி ஒரு கூட்டமும், கீர்த்தி சுரேஷ் பின்னாக போலீஸும், காணாமல் போன ரவுடியை தேடி அவரது ரவுடி குடும்பமும் மேற்கொள்ளும் இந்த பயணம் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் இணைய…
இப்போது இந்த இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்ட கீர்த்தி சுரேஷின் குடும்பம் என்ன ஆனது என்பதை விறுவிறு திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் ஒட்டுமொத்த
நகர்வுமே கீர்த்தி சுரேஷையும் அவரது குடும்பத்தையுமே சுற்றி வருகிறது. காரில் பிணத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கம் போலீஸ் துரத்தல் மறுபக்கம் ரவுடிகள் விரட்டல் என்ற அந்த இக்கட்டான பயணத்தில் தனது கேரக்டரை அசால்ட்டாக கையாளுகிறார் கீர்த்தி சுரேஷ். எதிரியின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிக்க திடீர் காதலை அவிழ்த்து விடும் இடமும் ரசமானது.
கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வரும் ராதிகா, சீரியஸ் காட்சிகளிலும் சிரிக்க வைத்து விடுகிறார்.
தெலுங்கு நடிகர் சுனில் தனது தந்தையை தேடும் இடங்கள் காட்சிகளை ஒரு வித திகிலுடன் வைத்திருக்கின்றன அவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
அஜய் கோஸ் வில்லனாக வந்தாலும் நகைச்சுவைக்கே அதிகம் பயன்படுகிறார்.
படத்தில் ரொம்ப படுத்துவது போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் தான். கீர்த்தி சுரேஷ் குடும்பத்திடம் அவர் விசாரணை நடத்தும் பாங்கு எரிச்சலூ ட்டுகிறது. இதுதான் நடிப்பு என்றால் பாவம் ரசிகர்கள்.
கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்ட்ராயன், அக்ஷதா, காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் ( ராம்ஸ் ) என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்துக்கு தங்கள் பாத்திர தேர்வால் சிறப்பு செய்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அக்மார்க் அமர்க்களம்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணாவின் கேமரா, பயண காட்சிகளை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, எதிர்பாராமல் நடந்த ஒரு கொலை பின்னணியில் காட்சிகளை விறுவிறுப்புடன் நகர்த்துகிறார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.
மொத்தத்தில் இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ புல்லட் வேகம்.
