உடலில் உள்ளுறுப்புகள் செயல்பாட்டை, கோளாறுகளை கண்டுபிடிப்பதற்கு சோதனை எந்திரங்கள் வந்துவிட்டன. இதில் அடுத்த கட்டமாக பொய் சொன்னால் கண்டுபிடிப்பதற்கு கூட ஒரு கருவி வந்து விட்டது.
இதேபோல ஒருவர் மனதில் உள்ள காதல் உண்மையா பொய்யா என கண்டுபிடிப்பதற்கு ஒரு எந்திரம் வந்துவிட்டால் எப்படி இருக்கும்? பொய்க் காதல்கள் வேரறு பட்டுப் போய் விடுமே.
அப்படி ஒரு கருவியைத்தான் நமது நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார்
காதல் ஜோடியில் ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் காதலின் சதவீதத்தை அந்த கருவி துல்லியமாகக் கணிக்கிறது.
இந்த நிலையில், நாயகி பாடினி குமாரை நாயகன் குரு லக்ஷ்மன் சந்திக்கிறார். அவருக்கு பாடினி தயாரித்திருக்கும் காதல் கருவி பற்றி தெரிய வர, அதை அவர் நம்பத் தயாராக இல்லை. ஒருவர் மனதில் உள்ள காதலை அதன் நம்பகத்தன்மையை மிஷினாவது கண்டுபிடிப்பதாவது என்கிறார்.
இவர்களுக்குள் அவ்வப்போது நடந்த சந்திப்பின் விளைவு, ஒரு கட்டத்தில் இவர்களே அறியாத ஒரு நேரத்தில் காதல் இவர்களையும் பதம் பார்க்க…
உண்மை அன்புக்கு அளவீடு உண்டா? காதல் கருவி இவர்கள் காதலுக்கு நடுவே குறுக்குச்சுவர் எழுப்பியதா என்பதை அறிவியல் பார்வையிலும் உளவியல் ரீதியிலும் தந்திருக்கிறார்கள், ரசமாகவே… சுவாரசியமாகவே
ஒருவர் மனதில் உள்ள காதலை அறியும் எந்திரம் என்பதே கதைக்கு கிடைத்த சுவாரசிய கருப்பொருள். அதுவே வழக்கமான காதல் கதையில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டி விடுகிறது.
நாயகியாக வரும் பாடினி குமார், நாயகனாக வரும் குரு லக்ஷ்மன் இருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களது ஆரம்பகட்ட சந்திப்பும் குட்டி குட்டி மோதல்களும் கதையின் சுவாரசியk களஞ்சியம். குறிப்பாக நாயகி பாடினி குமாருக்கு இந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது. தன் குடும்பத்தில் பெற்றோர் எதிர்பாராமல் பிரிந்ததை அந்தப் பிரிவின் துயர் தனது தாயின் உயிருக்கே உலை வைத்ததை நாயகனிடம் இவர் கண்ணீர் மல்க சொல்லும் இடம் தேர்ந்த நடிப்பின் அடையாளம்.
நடிக்கத் தெரிந்த பாடினி குமாருக்கு இனி சினிமாவின் சகல வாசலும் திறக்க வாய்ப்பு உண்டு.
சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலட்சுமி, இனி யாள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு என மற்ற துணைப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதையோடும் காட்சிகளோடும் நம்மை ஒன்றை வைத்து விடுகிறார்கள்.
செளந்தரராஜனின் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷின் இசை, நிசாமின் படத்தொகுப்பு என அனைத்துவிதமான தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுக்கான பெஸ்ட்டை தந்த விதத்தில் இந்த இணைய தொடர் சிகரம் ஏறி விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதைக்குள் காதல் அளக்கும் கருவியை கொண்டு வந்து வித்தியாசமான படைப்பை தந்ததில் வெற்றி பெற்று இருக்கிறார். எந்திர அளவீட்டுக்கு அப்பாற்பட்டதா காதல்? இந்தக் கேள்விக்கு கிளைமாக்சில் அவர் தரும் விடை தான் இந்த இணையத் தொடரை இதயங்கள் விரும்பும் தொடராக்கி விடுகிறது.
இந்த இணையத் தொடர் டிசம்பர் 16 முதல். ZEE 5 வெப் தளத்தில் காணக் கிடைக்கிறது.