இந்திய சினிமாவே கொண்டாடும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஃபிலிம் (படச்சுருள்), டிஜிட்டல்u என சினிமாவில் தொழில் நுட்பம் மாறிக்கொண்டே இருந்தாலும் பிசியின் ஒளிப்பதிவு மட்டும் எப்போதும் தனித்துவமானது. திரையில் ஆளுமை செய்யும் ஒளி ஓவியம் அது.
அவர் கேமரா இருட்டிலும் கவிதை பேசும். 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளரூக்கான தேசிய விருது பெற்றவர். கமல் அர்ஜுன் நடிப்பில் குருதிப்புனல் வெற்றிப் படத்தை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
திரைப் பொக்கிஷமான
இந்த கேமரா மேதை எந்த நிகழ்வில் பங்கெடுத்தாலும் ஓரிரு வார்த்தைகளோடு ரத்தின சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொள்வார். ஆனால் ஆச்சரியம், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க
பொங்கல் விழாவில் மட்டும் பி.சி.ஸ்ரீராம் இதுவரை இல்லாத அளவில் அவர் மனதை திறந்து பேசினார். பத்திரிகையாளர் சங்க நிகழ்வை தனது குடும்ப நிகழ்வாக கருதி யதால் இந்த ஆச்சரியம் நிகழ்ந்திருக்கலாம்.
சரி,விஷயத்துக்கு வருவோம்.
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 2026ஆம் ஆண்டு பொங்கல் விழா, சென்னை வடபழனி, அழகிரி நகரில் உள்ள பிஎம்ஆர் திருமண மண்டபத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் கவிதா தலைமையில், செயலாளர் கோடங்கி ஆபிரகாம் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம்,
வைட் ஆங்கிள் ரவிசங்கர், ‘சிறை’ படத்தின் நாயகன் எல்.கே.அக்ஷய் குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது சங்க உறுப்பினர்கள் பி.சி.ஸ்ரீராமிடம் கேள்விகளை எழுப்பியபோது அதற்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
கேள்வி பதில் இதோ உங்கள் பார்வைக்கு.
“ஒளிப்பதிவு என்பதே வெளிச்சம் எனும்போது நீங்கள் மட்டும் ஏன் இருட்டை விரும்புகிறீர்கள்?”
” இருட்டு என்பது தனி உலகம். தியேட்டரில் பார்ப்பவர்களுக்கு அது வேறுமாதிரியான அனுபவத்தை தரும். எனவே நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்கிறேன். அதை போற்றினாலும் போற்றாவிட்டாலும் அதைப்பற்றி நான் சிந்திப்பதில்லை. ஏனெனில் ஒளி என்பது எனது தாய். நல்லா எடுக்கவில்லை
யென்றால் என்
வீட்டில் என்னை தொலைத்து விடுவார்கள்.”
“ஒளிப்பதிவு துறையில் உங்களுக்கு கிடைத்த முதல் பாராட்டு?”
“மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் உன் படங்கள் வேறு மாதிரி இருக்கிறது என்று என்னை உற்சாகப்படுத்தியவர்கள் என் தாய் தந்தை தான். அவர்கள் தான் என் கடவுள்.”
மீண்டும் படம்
இயக்குவீர்களா?”
“இன்றைய சினிமாவில் குழப்பங்கள் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு புரியவும் இல்லை . அது புரியவரும் காலகட்டம் வரும்போது நிச்சயமாக படம் இயக்குவேன். இது என் தமிழ்த் தாய் மீது ஆணை.”
“உங்களிடம் கேமரா கற்றவர்களில் நீங்கள் வியந்து பார்க்கும் உதவியாளர்கள் யார்?”
“என்னிடம் உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்த அனைவரையும் எனக்கு பிடிக்கும் என்றாலும் ஜீவா, கே.வி.ஆனந்த்தின் திறமை ஆச்சர்யப்படுத்தியதுஅவர்கள் என்னுடன் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்க்கை எனக்கு பாடமாக இருந்தது.”
“உங்கள் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வீர்களா?”
“எனது வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு செய்யச் சொன்னால் செய்யமாட்டேன். ஏனெனில் வாழ்க்கை வரலாறு என்பது பொய். பொய் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.”
“உங்கள் கலை வாழ்க்கை பற்றி?”
“எனது வாழ்க்கை தோல்விகளால் நிரம்பியது. திரைப்பட
கல்லூரியில் படிக்கும்போது “இதிலாவது பாஸ் பண்ணிடு” என்று அம்மா சொன்னார்கள். ஆனால் அப்போதும் ஃபெயில் ஆகி
விட்டேன். தோல்விக்கு பழக்கப்பட்டவன் என்பதால் தோல்வி என் தோழனாகி விட்டான்”
“உங்கள் கேமரா பார்வையில் லைட்டிங் வைத்தால் எந்த நடிகர் அழகாக இருப்பார்?”
“அழகுக்கு அளவுகோல்
இல்லை. என் கேமரா பார்வையில் எல்லோருமே அழகு தான். அழகு தான் இயற்கையின் படைப்பு.”
“இப்போது ஏஐ தொழில் நுட்பம் வரை வந்துவிட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?”
‘இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. ஏஐ டெக்னாலஜி நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும்”
– இவ்வாறு கேள்வி பதில் பகுதி சுவாரசியமாக நிறைவு பெற, தொடர்ந்து
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.