புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பக்தர்கள் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் படம். ஆன்மீக பட வரிசையில் இது புது வரவு.
சாய்பாபா தனது இறுதிக் காலத்தில், தன் தீவிர பக்தர்களான ஐவரை அழைக்கிறார். அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரன், காசியைச் சேர்ந்த சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாசலம், கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்கர் ஜான் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பாபா செய்த அற்புதங்களைப் பகிர்ந்து கொள்வது தான் கதை.
மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் பாபா நடத்திய அற்புதங்களை ஜெகபதி பாபு சொல்லி கொள்ளையர்களை திருத்துகிறார்.
தங்கள் 30-வது திருமண நாளில் தான் மனைவி இறந்து போக, அதன் காரணத்தை புட்டபர்த்தி சென்று தெரிந்து கொண்டதை ஒய் ஜி மகேந்திரன் பரவசம் பொங்க விவரிக்கிறார்.
தவமிருந்து பெற்ற தன் ஒரே மகன் உயிருக்கு போராடும் வேளையில் பாபா நிகழ்த்திய அற்புதத்தால் அவன் மீண்டு வந்ததை கண்ணீர் மல்க பகிர்ந்து கொள்கிறார், சுகாசினி.
பரத நாட்டியக் கலைஞரான அபிராமி உலக அளவிலான நடனப் போட்டி நடைபெறும் தினத்தில் தடுக்கி விழுந்து கால் பிசகி காலை அசைக்கக்கூட முடியாத நிலை. பிறகு எங்கே ஆடுவது? ஆனால் அதிசயம் நடக்கிறது. ஆடுகிறார். வெற்றி பெறுகிறார். இது பாபாவின் கருணையே அன்றி வேறென்ன என்று நெகிழ்கிறார் அபிராமி.
கலிபோர்னிய காட்டுத்தீ தங்கள் வீட்டை மட்டும் தீண்டாத அதிசயத்தை அமெரிக்கராக ஜான் மகிழ்வும் நெகிழ்வுமாய் சொல்லி முடிக்கிறார்.
வழக்கமாக படங்களில் கொடூர வில்லனாக வந்து மிரட்டும் ஜெகபதி பாபு இதில் பாபா பக்தராக அன்பை பொழிபவராக வருகிறார். நல்லவராகவும், பக்திமானாகவும் வந்து கொள்ளையர்களை நல்வழிப் படுத்து கிறார். ஆச்சரியம் விலகாத வழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒய்.ஜி.மகேந்திரனி ன் பாலக்காட்டு நடிப்பு பற்றி ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. தங்கள் திருமண நாளில் மனைவி
ஸ்ரீ ரஞ்சனி சுருண்டு விழுந்து இறந்து போக, மனைவியின்
இழப்பை ஜீரணிக்க முடியாமல் பாபாவுக்கு எதிரான மனநிலையை அவர் வெளிப்படுத்தும் இடங்கள் நடிப்பில் அழகோ அழகு.
அவரது மனைவியாக வரும் ஶ்ரீ ரஞ்சனி தன் உடல்நிலை குறித்து கணவரிடம் மறைக்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.
தவமிருந்து பெற்ற மகனை மருத்துவம் கைவிட்ட நிலையில் ஒருபுறம் பாபாவிடம் வேண்டுதல், இன்னொரு புறம் மகனுக்கு ஏதாவது நேர்ந்தால் அதை குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற மனப்பக்குவம் இந்த இரு வேறு மனப் பிரளய நிலைகளிலும் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார் சுகாசினி.
அபிராமியின் அழகான நாட்டியம், அவர் வெற்றிக்கு புகழ் நாட்டிய பின்னணியில் பாபா இருப்பது, அவர் தந்தையாக வரும் தலைவாசல் விஜய் பாபாவின் அற்புதமாய் அதை உணரும் இடம் இரண்டுமே நெகிழ்வான காட்சிப் பதிவு.
அமெரிக்க ஜானின் பக்தி, பரவசத்தில் இன்னொரு வகை.
தேவாவின் இசையில் பாடல்கள் பக்தி மணம். பின்னணி இசையில் இதயம் கரைந்தே போகிறது. பாடல்களிலும் கதை வசனத்திலும்
பா.விஜய்யின் பங்கு அளப்பரியது.
அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவா பக்தி மனம் கமழக் கமழ இந்த படத்தை இயக்கினார் என்பது இன்னொரு ஆச்சரியம்.
இப்படிப் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய பாபாவுக்கும் அவரது பக்தர்களுக்குமான அன்னியோன்யத்தை சொன்ன விதத்தில் தனி கவனம் பெறு கிறது, இந்த அனந்தா.
அனந்தா என்றால் ஆனந்தம் என்று பொருள் . இந்த அனந்தாவோ பரவசம்.
ஜனவரி 16 முதல் Hot Star OTT யில் இப்படம் காணக் கிடைக்கிறது.