நீ. Forever — திரை விமர்சனம்

நடிப்புக்காக தொடங்கிய காதல் உண்மைக் காதலாக மாறினால்…
இந்த ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு நிஜமான காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார் இயக்குனர்.

தனது தாயின் காதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால் தாத்தாவின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டிய சூழல் நாயகனுக்கு. இதனால் பால்ய பருவம் தொடங்கி வாலிப வயது வரை தாத்தாவின் விருப்பமே அவன் விருப்பமாகிறது. தாத்தா பார்த்து முடிக்கும் பெண்ணைத்தான் அவன் திருமணம் செய்ய முடியும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம்.
படித்து முடித்து வேலைக்கு வரும் வெளியூரில் கூட தாத்தாவின் போன் அழைப்பு தான் அவனை இயக்குகிறது.
இந்நிலையில்
காதலர்களுக்கான செயலி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறான் நாயகன். அந்த செயலியை உருவாக்க போலியாக ஒரு காதல் அனுபவம் அவனுக்கு தேவைப்படுகிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புகிறாள். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது அவள் லட்சியம். அதற்கான முயற்சியில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போக…
அவரோ ஒரு நல்ல காதல் கதையுடன் வாருங்கள் என்கிறார். காதலை தனது எதிரி பட்டியலில் வைத்திருக்கும் நாயகி, காதல் கதை எழுத காதல் அனுபவம் தேவை என்பதை உணர்கிறார்.
இப்படி போலியாக காதலிக்க நினைக்கும் இவர்கள் சந்தித்துக்கொள்கிறார்
கள். போலியான இந்த காதல் பயணம், இருவரது வாழ்க்கையையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பது மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அம்சங்களோடு இருக்கிறார். கிராமத்து இளைஞனாக அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்கு முன், காதலுக்குப் பின் என தனது தோற்றத்தில் மட்டும் இன்றி, நடிப்பிலும் வித்தியாசம் காட்டுகிறார். உண்மையாகவே காதல் இதயத்துக்குள் ஊடுருவத் தொடங்கி தொடங்கிய நிலையில் ஏற்படும் மன வலியை அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்து
கிறார்.
நாயகியாக வரும் அர்ச்சனா ரவி, இந்த கேரக்டருக்கு தனது நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார். எதிர்பாராமல் நாயகனின் தாத்தா வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இடத்திலும், தாத்தாவை அன்பால் ஆகர்ஷிக்கும் இடத்திலும் இவரது நடிப்புக்கு வெல்டன் சொல்லத் தோன்றுகிறது.
நாயகனின் நண்பர்களாக வரும் பிரதோஷ், நோபல், வித்யா கதையோடு இணைந்து காட்சிக்கு அழகு சேர்க்கிறார்கள்.
கண்டிப்பான அந்த தாத்தா கேரக்டரில் ஒய்.ஜி.மகேந்திரன் கச்சிதம்.
நிழல்கள் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் வரும் கொஞ்ச நேரத்திலும் நடிப்பால் நெஞ்சம் நிறைகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜியின் கேமரா காதலர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதுக்குள் இயல்பாக கடத்தி விடுகிறது

அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். எல்லை தாண்டாத
பின்னணி இசை படத்தின் இன்னொரு பலம்.

அசோக்குமார் கலைவாணி இயக்கி இருக்கிறார்.
காதலை மட்டுமே மையப்படுத்திய கதை என்றாலும், அதை குடும்ப உறவுகளின் பின்னணியோடு சொன்ன விதத்தில் தேர்ந்த இயக்குனராக மனதில் தடம் பதிக்கிறார்.
போலியாக காதலிக்கும் இருவரது மனதில் இருக்கும் உண்மையான காதல் வெளிப்படும் இடங்கள் கண்ணோரம் ஈரம்.
காதலை புதுமையாக கையாண்டதற்காகவே இயக்குனருக்கு கொடுக்கலாம் அழகு பூங்கொத்து.
படத்தின் பிளஸ் : எடுத்துக்கொண்ட கதை.
பிளாஷ் : அதை சுவைபட சொன்ன விதம்.
ரேட்டிங்: 6/ 10.