வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்

விலங்கு இணையத்தொடரில் அதுவரை நாம் பார்த்திராத காவல்துறையின் இன்னொரு பக்கத்தை காண்பித்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இந்த வாரண்ட் இணையத் தொடர் மூலம் இதே காவல்துறையின் கதையின் இன்னொரு இருட்டு பக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். அதோடு இந்த தொடரின் நாயகனாகவும் ப்ரமோஷன் ஆகி இருக்கிறார். நியாயமான பிரமோஷன் என்பதை நடிப்பில் நிரூபித்து இருக்கிறார்.

தங்கள் ஒரே மகனை அரசு ஊழியர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. மகனோ எழுதும் எல்லா அரசுத் தேர்விலும் கோட்டை விடுகிறான்.
காவல்துறையும் அரசுப் பணி தானே. நாயகனின் தந்தையின் விருப்பத்துக்காக நாயகனை போலீஸ் பணியில் சேர்த்து விடுகிறார் அவரது உறவுக்காரர்.
ஆனால் காக்கி சட்டை அவரது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பொருத்தமானதாக இல்லை.
அதோடு பணியில் சேர்ந்த காவல் நிலையத்திலும் பல விதங்களில் அவமதிக்கப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் இந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்யும் போது எதிர்பாராத திருப்பம் நிகழ்கிறது. அது நாயகனை அவரது கேரியரின் உச்சத்துக்கு கொண்டு போகிறது.
இந்த ஆச்சரியத்துக்குப் பின்னால்
இருப்பது என்ன ? நடந்தது என்ன என்பதை சுவாரஸ்யத்திற்கு சிறிதும் பங்கமின்றி தந்திருக்கிற திரைக்கதை இந்த இணைய தொடரின் முதல் பிளஸ்.

லாக்கப்பில் நாயகனிடம் லத்தி அடிகளை பரிசாக வாங்கிய ஒரு விசாரணை கைதி இறந்து கிடப்பது போல் கதையை தொடங்குகிறார்கள்.
இதனால்
மேலதிகாரிகளின் விசாரணைக்கு ஆளாகிறார் நாயகன். இந்த லாக்கப் மரணத்துக்கு முன்னும் பின்னும் ஆன நாயகனின் இடை விடா
போராட்டத்தை, அடுத்து என்ன ஆகுமோ என்ற எதிர்பார்ப்பை டெம்போ குறையாமல் தந்திருக்கிற திரைக்கதை இரண்டாவது பிளஸ்.
அமைதியான முகம்,மிரட்சியான கண்கள், கொழுக் மொழுக்கென்ற உடல் இப்படி காவல்துறைக்குப் பொருத்தமேயில்லாத ஒருவர்,காவல்துறை பணியில் இருக்கிறார் என்பதே சுவாரசியம்.அதில் அவருடைய செயல்பாடுகள் கூடுதல் சுவாரசியம். காட்சிக்கு காட்சி நடிப்பின் எல்லையை விஸ்தரித்துக் கொண்டே
போகிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.
குறிப்பாக பாலியல் தொழிலாளியுடன் இணைந்து இவர் பிரபல ரவுடி கொடைக்கானல் சரவணனை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் அக்மார்க் அமர்க்களம்.
நம்ரிதா, அருள்ஜோதி, சாயா தேவி என மூன்றுபேர் நாயகியராக வருகிறார்கள்.
தங்கள் கேரக்டர்களில் இயல்பாக நடித்து வரவேற்பு பெறுகிறார்கள். குறிப்பாக நர்சாக வரும்
நம்ரிதா இவர்களில் கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருள்தாஸ்,காவலராக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி மற்றும் ரவுடி கொடைக்கானல் சரவண சரவணனாக வரும் பாக்யா ஆகியோரும் கதை மாந்தர்களாக இயல்பாகப் பொருந்தி போகிறார்கள்.
குறிப்பாக நாயகனின் அப்பா பாலாஜி சக்திவேல் மகனுக்கு பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் கதையை சொல்லும் இடத்திலும், ஒற்றுமையாக இருக்கும் அவசியம் குறித்து காவலர்களிடம் அருள்தாஸ் சொல்லும் கிளைக்கதையும் இந்தத் தொடரை இரு பக்க தூண்களாக நின்று தாங்குகின்றன.
நாயகனின் உறவினராக போலீஸ் வாசனையுடன் காளி வெங்கட் ஆஸம்.

தொடருக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அசோக்குமார், திரைக்கதையின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

சாம்.சி.எஸ் பின்னணி இசையை இந்த தொடரின் இன்னொரு நாயகன் எனலாம்.

படத்தொகுப்பு செய்திருக்கும் ஆர்.ராமர், தொடரை சுவாரஸ்யப் படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார்.

பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் இணைந்து கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
காவல்துறையினர் ஏன் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான உளவியல் ரீதியான விளக்கம் கொடுத்ததோடு அதை உண்மைக்கு மிக நெருக்கமாகவும்
சொல்லி இருக்கிறார்.
காவல் நிலையங்களில் மிகத் தாராளமாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள் இந்த தொடரிலும் நிறைந்து முகம் சுளிக்க வைக்கின்றன.

விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார்.
எழுத்திலும் அவர் பங்களிப்பு இருப்பதால் காட்சிகள் அமைப்பதில் தெளிவு இருக்கிறது.விலங்கு தொடருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்கள் வாரண்ட் இல்லாமலே இந்தப் படைப்புக்குள் சுலபமாக வந்து விடுவார்கள்.

பிளஸ்: கதையின் நாயகனாக வந்து காட்சிக்கு காட்சி நடிப்பில் விஸ்வரூபம் எடுத்த பிரசாந்த் பாண்டியராஜ்.
பிளாஷ்: காக்கி சட்டைக்குள் இதுவரை நாம் பார்த்த பார்த்திராத இன்னொரு முகம்.
ரேட்டிங்: 8/10.
இந்த இணையத் தொடரை ஜீ 5 இணையதளத்தில் பார்க்கலாம். ரசிக்கலாம்.