காட்டாளன் –திரை விமர்சனம்

காட்டாளன் என்றால் காட்டை ஆள்பவன் என்று அர்த்தம். காட்டில் வாழும் யானைகளை கொன்று தந்தங்களை விற்று கோடிகளை குவிக்க இரு கூட்டம் மோதி கொள்கிறது. இதில் வீழ்ந்தது யார், வென்றது யார்? என்பதை ரத்தம் சொட்ட சொட்ட சொல்லி இருக்கிறார்கள்.
கேரளாவின் அழகுமிகு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல்கார சுனில், அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். இதனால் வருமானம் கோடிகளில் குவிகிறது.
திரண்ட செல்வத்துடன் கூடிய ராஜ வாழ்க்கை என்றால் யாருக்குத் தான் பிடிக்காது?அவரது இடத்தை பிடிக்க துடிக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்.
காட்டிலாகாவிடம்
பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக தனது நண்பன் ஆண்டனி வர்கீஸை களம் இறக்குகிறார், சுனில்.
ஆண்டனியின் சாமர்த்தியமான அணுகுமுறையால் இழந்த தந்தங்களை மீண்டும் பெறும் சுனில், மீண்டும் யானை தந்தங்களை கடத்தும் பணியை தொடர்கிறார்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான நண்பனின் குழந்தையை காப்பாற்ற பணம் கேட்டு ஆண்டனி சுனிலை நாட…
சுனிலோ பிச்சை போடுவது போல் ஒரு சிறிய தொகையை கொடுத்து இதற்குள் குழந்தையை காப்பாற்ற முடிந்தால் காப்பாற்றிக்கொள் என்கிறார்.
உரிய நேர மருத்துவ உதவி கிடைக்காததால் அந்த குழந்தை மரணத்தை தழுவ, ஆத்திரமாகும் ஆண்டனி
சுனிலுக்கு போட்டியாக யானைத் தந்தங்களை கடத்த தொடங்குகிறார். காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் பரிபூரண ஆதரவை ஆண்டனிக்கு தர…
இதனால் கோபத்தின் உச்சிக்கே போகும் சுனில், தனது எதிரியான கபீர் துகான் சிங் உடன் கைகோர்க்கிறார்.
இதே வேளையில் பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்த தயாராகிறார் ஆண்டனி.
இந்த யுத்தத்தில் வென்றது யார் ?, கடத்தல்காரர்களை அழிக்க வந்த இந்த ஆண்டனி வர்கீஸ் யார் ?, என்பதை அதிரடி ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் தந்திருக்கிறார்கள்.

நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸிடம் ஆழ்கடல் புயல் நடிப்பு மையம் கொண்டிருக்கிறது. தீர்க்கமான பார்வை, அளவான அதே நேரம் ஆழமான நடிப்பு என அந்த கேரக்டருக்கு பெருமை சேர்த்து விடுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்
அதகளப்படுத்தி
யிருப்பவர்,அதிகம் பேசாமல், அந்த அழுத்தமான கதாபாத்திரத்தை பேச வைத்திருக்கிறார்.
வில்லனாக வரும் சுனில், முரட்டுத்தன வில்லனாக மிரட்டுகிறார். மற்றொரு வில்லனாக ஆவேச முகம் காட்டும் கபீர் துகான் சிங் அனலாக வந்து போகிறார்.
இடைவேளைக்கு பிறகு தான் என்ட்ரி என்றாலும் சீற்றமிகு சிங்கப் பெண்ணாக துஷாரா விஜயனை ரசிக்க முடிகிறது.
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை
கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். கதாபாத்திரங்கள் அறிமுகமே அடேயப்பா என்கிற அளவுக்கு நீட்டி முழக்குகிறது. ரவி பஸ் ரூர் இசை இது மாதிரியான அதிரடி படங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மனிதர் கலக்கி இருக்கிறார்.
சமீர் முகமதுவின் படத்தொகுப்பு இரண்டு மணி நேர காட்சிகளையும் வேகம் குறையாமல் தந்திருக்கிறது.
பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை, உன்னி.ஆரின் வசனம் எல்லாமே அழகுற இணைந்து இந்த ஆக்‌ஷன் படத்துக்கு பக்க பலம் ஆகி இருக்கிறது.
பவுல் ஜார்ஜ் இயக்கி இருக்கிறார்.
’கே.ஜி.எப்’ படத்தில் தங்க கடத்தல், ’புஷ்பா’ படத்தில் சந்தன கட்டை கடத்தல் என்ற வரிசையில் இந்த படம் முழு நேர யானை தந்தம் கடத்தும் படமாகி, அதிரடி விரும்பும் ரசிகனின் விருப்பப் பட்டியலில் இணைந்து கொள்கிறது.

பிளஸ்: வேகமான திரைக்கதை. அதற்கேற்ற நட்சத்திரங்கள்.

பிளாஷ்: காட்டுக்குள் கைபிடித்து அழைத்துச் செல்லும் கேமரா.

ரேட்டிங்: 6.5/10.