இசை மேதைகளின் வாழ்க்கையை எந்தவித பாசாங்கும் இன்றி சொன்ன சங்கராபரணம், சிந்து பைரவி வரிசையில் இதோ இப்போது சாரு கேசி.
கச்சேரி அரங்குகளில் இன்னொரு பாட்டு பாட மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு சங்கீதம் கரை புரளும்
ஆற்றல் பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் சாருகேசிக்கு அன்பான மனைவி, அடங்காத மகன் என்று
சின்னக் குடும்பம்.
இசை எப்படி அவருக்கு உயிரோ, அப்படியே மனைவியும். இசைத்துறையில் தனது வெற்றிக்கு காரணம் மனைவியே என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
இசையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி பணம், புகழ், என்று பார்த்து விட்டாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலி நிறைந்தது. அதற்கு காரணம் அவரது ஒரே மகன். தந்தையின் அடையாளம் இல்லாமல் தனது தனித்துவமான அடையாளத்தோடு வாழ விரும்பும் மகன், தாய், தந்தைக்கு தெரியாமல் தன் காதலியை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணமாக இருந்தாலும், அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் சாருகேசி தம்பதிகளுக்கு வீட்டுக்கு வந்த மருமகள் மூலம் அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை மருமகள் சொல்லி
அவர்களை பழிவாங்கவே அந்த வீட்டுக்கு மருமகளாக வந்ததாகவும் கூற…
ஏற்கனவே மகனின் செயலால் மனம் நொந்து போயிருக்கும் சாருகேசி மருமகளின் இந்த பழி வாங்கும் நோக்கத்தை எப்படி எதிர் கொண்டார்? அந்த ரகசியம் தான் என்ன ?, என்பது விறுவிறுப்புடன் கூடிய சஸ்பென்ஸ்.
கதையின் நாயகன் சாருகேசியாக ஒய்.ஜி.மகேந்திரா நடித்து இருக்கிறார் என்பதை விட, வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சாருகேசி என்ற அந்த இசை மேதை கதாபாத்திரத்திற்கு நடை உடை பாவனைகளில் கூட அப்படியோர் அன்யோன்யம்.
ஊருக்கு வெற்றியின் உச்சம் தொட்ட சங்கீத சாம்ராட் என்ற அடையாளம்; உள்ளுக்குள் மகனால் அவமதிக்கப்படும் ஒரு சாதாரண தந்தை என்ற இரண்டு விதமான
நிலைப்பாட்டையும் தனது நடிப்பால் நமக்குள் இயல்பாக கடத்தி விடுகிறார். ஞாபக மறதி நோய் தொடங்கிய நேரத்தில் சாப்பிட்டதை மறந்து மனைவியிடம் மறுபடி சாப்பாடு போடச்
சொல்ல, மனைவியோ ஏற்கனவே சாப்பிட்டு விட்டீர்களே என்று சொல்ல… மனைவி சொன்னதை நம்பியும் நம்பாமலும் வெளிப்படுத்தும் அந்த நடிப்பு நிஜமாகவே ஆசம்.
கிளைமாக்ஸ் பாட்டில் ஒட்டுமொத்த இசை வித்தையையும் நடிப்பில் இறக்கி வைக்கும் சாருகேசிக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.
சாருகேசியின் மனைவி பத்மா கதாபாத்திரத்தில் வரும் சுஹாசினி, அந்த பாத்திரத்துக்கு தனது நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார்.
சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் மற்றும் மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் இருவரும் பொருத்தமான தேர்வில் பளிச்சிடுகிறார்கள். குறிப்பாக ரம்யா பாண்டியன் அந்த வில்லத்தனத்தில் மனதில் நிற்கிறார்.
நடமாடும் கடவுளாக சத்யராஜ், சாருகேசியின் அபிமானியாக சமுத்திரக்கனி, விசுவாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும் சாருகேசி தம்பதிகளின் வலது கரமாக தலைவாசல் விஜய், மற்றும் தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதைக் களத்தோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
கானா பாடல்களுக்கு பெயர் போன தேவா, கர்நாடக சங்கீதத்திலும்
கானம் மீட்டி இருக்கிறார். குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் பாட்டு தேவ கானம்.
பா.விஜய்யின் பாடல்களும், வசனமும், சஞ்சய்யின் ஒளிப்பதிவும் படத்தின் இரு பக்க தூண்கள்.
வெங்கட் எழுதிய கதைக்கு
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்,
சுரேஷ் கிருஷ்ணா.
மேடை நாடகம் திரைப்படம் ஆகும்போது, நாடகத் தன்மை சிறிதும் இல்லாமல் படம் பிடிப்பது சவாலான காரியம். அந்த சவாலை தனது இயல்பான இயக்கம் மூலம் வென்று இருக்கிறார்.
சாருகேசி என்ற மாபெரும் இசைக்கலைஞனின் உள்ளும் புறமும் இவர் இயக்கத்தில் வெளிப் பட்டிருப்பது தனி அழகு. கிளைமாக்சில் மறதி நோயிலிருந்து மீண்டு சாருகேசி படைக்கும் அந்த இசைக் காவியம் எழுந்து கைதட்ட வைக்கும் காட்சி.
பிளஸ்: சங்கீத மழையோடு சங்கமிக்க வைத்த தேவாவின்
திகட்டாத இசை.
பிளாஷ்: சாருகேசியாக வாழ்ந்து காட்டிய ஒய்.ஜி. மகேந்திரா.
ரேட்டிங்: 8/10.
