அனந்தன் காடு-திரை விமர்சனம்

கோவாவில் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை பிரம்மாண்டமாக நடத்திக்கொண்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி சுனிலை இளைஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர். அவர்களுக்கும், சுனிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் சுனிலை மிரட்ட வேண்டும்? இந்த கேள்விக்கு இப்போது பிளாஷ்பேக்கில் இருந்து கதையை தொடங்குகிறார்கள்.

1989-ம் ஆண்டு இலங்கையில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் தனது குடும்பத்தை இழந்த ஆர்யா கடல் கடந்து தமிழகம் வருகிறார். கேரள முதல்வருக்கு கூலிப்படையாக இயங்கும் இந்திரன்ஸ் தலைமையிலான கூலிப்படையில் இணைகிறார்.

கேரள முதல்வருக்கு தலைவலியாக இருந்து கொண்டிருக்கும் திண்டுக்கல் பிரபலம் ஒருவரை கொல்ல அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. கேரள முதல்வரே வியக்கும் அளவுக்கு அத்தனை சீக்கிரம் நெருங்க முடியாத அந்த திண்டுக்கல் பிரமுகரை போட்டுத் தள்ளுகிறார் ஆர்யா.

ஆனால் கால ஓட்டத்தின் சுழற்சியில் இதே கூலிப்படையை தனது வலதுகரமாக விளங்கும் உயர் போலீஸ் அதிகாரி அதிகாரி சுனில் மூலம் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார் முதல்வர். அதற்கான காரண பின்னணியில் முதல்வரை அச்சுறுத்தும் ஆர்யாவும் இருக்கிறார்.

முதல்வரின் அதிகாரத்துக்கு முன் ஆர்யா என்ன ஆனார்? இந்திரன் மற்றும் அவரது குழு என்ன ஆனது? என்பது பரபர திரைக் கதை.

அரசியல் பழிவாங்கல், நயவஞ்சகம், அதிகாரப்போட்டி என கதை பல்வேறு தளங்களில் பயணித்த போதிலும் பழிவாங்கலே பிரதானமாக முன்னிற்கிறது. அதுவே கதையை விறுவிறுப்பின் உச்சத்திலும் தூக்கி நிறுத்துகிறது. அதை முடிவு வரை டெம்போ குறையாமல் கொண்டு சென்ற இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

குடும்பத்தை இழந்த இலங்கை தமிழராக பார்வையில் அமைதி பாய்ச்சலில் ஆக்ரோஷம் என நடிப்பில் இதுவரை நாம் பார்த்திராத புதிய ஆர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. கூலிப்படையில் இணைந்தாலும் போராளிக்கே உரிய குணாதிசயங்களுடன் அதிரடியில் அவர் காட்டும் வேகம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக எளிதில் நெருங்க முடியாத திண்டுக்கல் பிரமுகரை கட்டுக்காவல்களை உடைத்து அவர் போட்டுத் தள்ளும் இடத்தில் கண்களில் தெரியும் அந்த வெறி, நடிப்பின் எந்த எல்லைக்குள்ளும் அடங்காதது.

அப்பாவித்தனமான கேரக்டர்களிலேயே எப்போதும் வந்து போகும் இந்திரன்ஸ் இந்த படத்தில் கூலிப்படை தலைவனாக வந்து மிரட்டி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் அதிகாரியை மிரட்டும் அந்த நடிப்பில் அவரது உடல் மொழியும் இணைந்து பிரமிக்க வைக்கிறது.

இவருடன் வரும் முரளி கோபி, அக்‌ஷய்குமார், தேவ்மோகன், போஸ்வெங்கட் என அனைவருமே பாத்திர வார்ப்பில் பளிச்சி டுகிறார்கள்.

முதல்வரின் வலது கரமாக உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சுனிலின் வில்லத்தனம் படம் முழுக்க பரபரப்பை பற்ற வைக்கிறது.

நாயகிகள் பட்டியலில் நிகிலா விமல், ரெஜினா இருப்பினும் கதை அவர்களை ரொம்பவே அடக்கி வாசிக்க வைத்து விடுகிறது. முதல்வரே மிரட்டும் செல்வாக்கு படைத்த திண்டுக்கல் பிரமுகராக அச்சுத குமார் கச்சிதம். கேரள முதல்வராக விஜயராகவன் கன கச்சிதம்.

ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா கதையின் வீரியத்தை அதன் மாற்று குறையாமல் கண்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொன்று, அஜீனிஷ் லோக்நாத்தின் இசை. படம் நெடுக திரை உணர்வை நம் மனதில் பதித்து விடுகிறது.

முரளி கோபி கதை திரைக்கதை எழுத, இயக்கி இருக்கிறார் ஜியேன் கிருஷ்ணமூர்த்தி.

அதிகார வர்க்கம் என்பது எந்த எல்லைக்கும் போகும் என்பதை இலங்கை தொடங்கி கேரளா வரை சுற்றி வளைத்து சொல்லி இருக்கிறார். என்னாலும் படத்தின் சிற்சில குறைகளை மறக்கடிக்கும் அந்த கிளைமாக்ஸ் அதிரடி விரும்பும் ரசிகனை குதூகலம் ஆக்கி விடுகிறது.

பிளஸ்: ஆழ் கடலின் அமைதி போல் வந்து அதிரடிக்கும் ஆர்யாவின் நடிப்பு.

பிளாஷ்: சற்று நீண்டாலும் விறுவிறுப்பு குறையாத கதைக்களம்.

ரேட்டிங்: 7 /10.