அந்தரன்–திரை விமர்சனம்

அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள்.
இளம்பெண் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயமாகும் போதெல்லாம் அந்த மாப்பிள்ளை கல்யாணத்திற்கு முன் உயிரிழந்து போகிறார். கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இந்த இழப்புகள் தொடர்கிறது.
இது குறித்து துப்பு துலக்க காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். (அவருக்கும் கார்த்திகா விஷயத்தில் ஒரு பழைய விட்ட குறை தொட்ட குறை கணக்கு இருக்கிறது.)
இந்த மர்ம
கொலை வழக்கில்
மறைந்திருந்து வேட்டையாடுபவரை கண்டுபிடிக்க ஒரு கட்டத்தில் கார்த்திகாவின் சம்மதம் பெற்று அவளை மணந்து கொள்கிறார். அதன் பிறகு அந்த கொலையாளி யார் என கண்டுபிடிக்கிறார்.
அது எப்படி என்பது என்பது கொஞ்சமும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
காவல்துறை அதிகாரி வேடத்துக்கே பொருத்தமாக இருக்கிறார். அவர் துப்பறியும் பாணியில் காணப்படும் தனித்துவம் அவருக்கே உரிய ஸ்பெஷல். கார்த்திகாவை திருமணம் செய்ய முடிவெடுத்த பிறகு அவர் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளிலும் நடிப்பு வாசனை, சற்று கூடுதலாகவே.

கதை மொத்தமும் தன்னைச் சுற்றித்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அந்த கார்த்திகா கேரக்டருக்குள் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்
நாயகி இவானா வருண். காதல் காட்சிகளில் ஒரு முகம், பதறும் நேரங்களில் இன்னொரு முகமாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார். இவரது மூன்றாம் முகம் தொடர்பான கிளைமாக்ஸ் காட்சியில் அதுவரை பார்த்திராத புதுவித நடிப்பில் மிரட்டி விடுகிறார்.
நாயகியின் தந்தையாக எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக செந்தி குமாரி, மருத்துவராக அனுபமா குமார், மற்றும் அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் ஆகிய அனைவரும் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச் சந்திரனின் கேமரா திகில் காட்சிகளில்
மிரட்டி விடுகிறது.
எஸ்.ஆர்.ஹரியின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். .பின்னணி இசை காட்சிகளை நெஞ்சோடு இணைத்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் இராவணன், முற்றிலும் புதுமையான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் புகுந்து விளையாடி இருக்கிறார். உண்மையான கொலையாளி யார் என்று தெரியவரும் அந்த கிளைமாக்ஸ் ஒன்று போதும், இயக்குனருக்கு மகுடம் சூட்ட.

பிளஸ்: வித்தியாசமான கதைக்களம்.

பிளாஷ்: புதிய கோணத்தில் அமைந்த நாயகி பாத்திரத்தின் வடிவமைப்பு.

ரேட்டிங்: 7/10.