ஹார்ட்டின்–திரை விமர்சனம்

முக்கோணக் காதல் கதைகளில் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணம். அதனாலயே இது சிறப்பு கவனம் பெறுகிறது.

நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல். ஒரு கட்டத்தில் சனத்-மடோனா காதலில் பிரிவு நேர…
இப்போது காதல் இடம் மாறி இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார் சனத். இந்த காதல், திருமணம் வரை வருவதற்குள் சனத்துக்கு ஒரு விபத்து நேர்ந்து நினைவுகளை இழக்கிறார். இதில் குறிப்பாக அவர் அடியோடு இழந்தது இமயாவுட னான காதல் நினைவுகளை.
அதனால் பழைய காதலியைத் தேடிப்போகிறார். அதிர்ச்சி விலகாமல் புதுக்காதலியும் அவருடன் போகிறார்.
ஜனத்துக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? தன்னை உயிராக காதலித்த புதிய காதலியை அவரால் தெரிந்து கொள்ள முடிந்ததா? என்பது சஸ்பென்ஸ்.

நாயகன் சனத்துக்கு இரண்டு நாயகிகள் இரண்டு விதமான காதல்கள். இரண்டிலும் உற்சாகமாக, காட்சிகளில் காதல்
மணக்க மணக்க நடித்திருக்கிறார். பழைய
நினைவுகள் மறந்த நிலையில் வரும் காட்சிகளில் நடிப்பில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறார்.
கலகலப்பு, உற்சாகம்,சோகம் ஆகிய எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடம் அந்த கேரக்டரில் அவரை தூக்கி நிறுத்துகிறது.

அறிமுக நாயகி இமயாவுக்கு முதல் படத்திலேயே கனமான வேடம். அதில் பொறுப்பாக தன்னை பொருத்திக் கொள்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மடானோ செபஸ்டியனுக்கு அழகான திரை தரிசனம் வாய்த்திருக்கிறது. அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நினைவு தப்பிய முன்னாள் காதலன் இப்போதும் தன்னை காதலியாக நினைத்து அன்பு காட்டும் இடங்களில் மடோ னாவின் முக பாவங்கள் அத்தனை சிறப்பு.
நாயகனின் நண்பராக வரும் வாட்ஸ்-அப் மணிக்கு குணச்சித்திரம் இணைந்த நகைச்சுவை கேரக்டர். இரண்டிலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது.
அவரது மனைவியாக வரும்
டெப்னிதா நடிப்பிலும் குறைவில்லை.

ஒளிப்பதிவாளர் முகேஸ்வரனின் கேமரா ஜெய்ப்பூர், ஊட்டி அழகோ அழகு.
ராஜேஸ் முருகேசனின் இசையில் பாடல்கள் நெஞ்சுக்குள் சுகராகம் மீட்டுகிறது.
பின்னணி இசையும் நன்று.
எழுதி இயக்கியிருக்கும் கிஷோர்குமார், இளைஞர்களை ஈர்க்கக்கூடிய காதல் கதையை எடுத்துக்கொண்டு அதை புதுவித ரசனை கோர்த்து சொல்லியிருக்கிறார். நாயகனுக்கு நேர்ந்த விபத்து, பிரேக் அப் ஆன காதலை மறுபடி நாயகன் உயிர்ப்பிக்கும் இடத்தில், தற்போதைய காதலியின் நிலை என்னவாகும் என்ற கவலை நமக்குள் வந்து விடுகிறது.

பிளாஷ்: முடிந்த காதல், விபத்துக்கு பிறகு மீண்டும் உயிர்த்தால்… என்ற புதிய சிந்தனை.

பிளஸ்: இந்த முக்கோண காதல் கதைக்கு இயக்குனர் கொடுத்த கவித்துவ முடிவு.