வில்லுப்பாட்டு மாதவியின் கம்பீர குரலுடன் வெளியான ‘வேட்ட சாமி’ ஃகிளிம்ஸ்

வில்லுப்பாட்டு மாதவியின் கம்பீர குரலுடன் வெளியான ‘வேட்ட சாமி’ ஃகிளிம்ஸ் பம்பர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய எமோஷனல் ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்பொழுது இறுதிக்கட்டப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் (7 Miles Per Second Productions) நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் (Glimpse) காணொளி தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

திரைத்துறையின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் கமர்சியல் கதாநாயகி கதாபாத்திரம் ஏதுமில்லாமல், முழுக்க முழுக்க கதையையும், அதன் அழுத்தமான கதாபாத்திரங்களை
யும் மட்டுமே மையப்படுத்தி நகரும் ஒரு புதுமையான பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளையும், அதன் வாழ்வியல் பின்னணியையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சாதி மற்றும் மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் சில முக்கியச் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் இரத்தமும் சதையுமான எதார்த்தமான வாழ்க்கைக்குள் சென்று மிக ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.

இப்படத்தின் அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நாயகன் அருள்நிதி சாமி வந்து ஆவேசமாக ஆடும் ஒரு உக்கிரமான தோற்றத்தில், தீவிரமான பார்வையுடன் காட்சியளித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார். அதன் பின்னணியில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான காவல் தெய்வச் சிலையும், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளும் இப்படத்தின் அசல் கிராமிய மற்றும் ஆன்மிகப் பின்னணியை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.