ஐ யாம் கேம் -திரை விமர்சனம்

கிரிக்கெட் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை விட்ட இளம் தொழிலதிபர் துல்கர் சல்மான் கடனாளியாகி விடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கொடுத்தநெருக்கடியில் விபத்தொன்றிலும் சிக்குகிறார்.

இந்த விபத்தில் அவரது ஒரு கை சேதம் அடைய, இறந்து போன ஒருவரின் கை அவருக்கு ஆபரேஷன் மூலம் பொருத்தப்படுகிறது.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் துல்சர் சல்மானின் வாழ்க்கையில் அவரது புதிய கை ஒரு கட்டத்தில் அவருக்கே பிரச்சனைகளை கொண்டு வருகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கை, தொழிலதிபரும், மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் நிதியுதவியாளரு மான மிஷ்கினையே கொல்ல முயற்சிக்கிறது.

இதன் பிறகே அந்த கை, தனக்கான பிரச்சனையில் நம்மை சிக்க வைக்கப் பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ளும் துல்கர் சல்மான், அந்த கைக்கு உரியவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று அந்த கையின் பின்னணியை கண்டுபிடித்து பிரச்சனையை எப்படி சரி செய்கிறார் ? என்பதை சொல்லும் வேக வேக திரைக்கதையே ’ஐ யாம் கேம்’.

இளம் தொழிலதிபராக வந்து ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் மாறான நடிப்பில் வெளிப்படுகிறார்.

தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் அந்தக் கையை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு இருக்கிறதே அப்பப்பா. குறிப்பாக பொது இடத்தில் மிஸ்கினை பார்த்த மாத்திரத்தில் கொல் லத் துடிக்கும் அந்தக் கையை அடக்கியாள அவர் படும் பாடு, பெரும்பாடு.

நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், தோற்றத்தில் கவரும் அளவுக்கு நடிப்பிலும் கவர்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின், சூதாட்ட உலக செயல்பாடுகளை நடிப்பால் நம் கண் முன் நிறுத்துகிறார்.

கிரிக்கெட் வீரராக வந்து நடிப்பில் சதம் அடிக்கிறார் ஆண்டனி வர்கீஸ். வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் நேர்மைக்காக உயிரை விடும் இடத் தில் ஜீவனுள்ள நடிப்பு.

குற்ற உணர்வு சிறிதும் இல்லாத கிரிக்கெட் கேப்டனாக கதிர். அந்த ஆழ்கடல் அமைதி நடிப்பில் சிக்சர்கள் பறக்கிறது.

ஆன்டனியின் காதலியாக வரும் சம்யுக்தா விஸ்வநாதன், காதலனை காப்பாற்ற போராடும் இடத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்தின் கேமரா இரவு நேர காட்சிகளை பிரகாசமாய் கண்முன் நிறுத்துகிறது.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்திருக்க, பின்னணி இசையோ கனமான கதைக்குள் இதமான இடைச்செருகல். இயக்கி இருக்கிறார் நகாஸ் ஹிதாயத்.

சூதாட்ட பின்னணியில் பாதிக்கப்பட்ட இளைஞனின் பழிவாங்கலை மையமாக்கி கொண்டிருக்கும் திரைக்கதை,

தொடக்கம் முதலே படத்தை விறுவிறுப்பாக வைத்துக் கொள்கிறது. ரசிகர்களுக்கு அதுதானே வேண்டும்.

பிளஸ்: கதை சொல்வதை ‘கை’வந்த கலையாக திரையில் காட்டி இருக்கும் இயக்கம்.

பிளாஷ்: படத்தின் இன்னொரு ‘கை’யாகவே உலாவரும் துல்கர் சல்மான்.

ரேட்டிங்: 7/10.