குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் தான் ‘வைல்ட் தமிழ்நாடு’. (Wild Tamil Nadu)
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல், மணலும் மணல் சார்ந்த இடமுமான பாலை என தமிழகத்தின் ஐந்து வகை நிலப்பரப்புகளில் வாழும் எறும்பு முதல் யானை வரையிலான
உயிரினங்களின் வாழ்வியலை நேரடியாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள் அதற்காக காடு மேடு சுற்றி திரிந்து படம்
பிடித்திருக்கிறார்கள். கடலின் அடியாழம் வரை போய் விதவிதமாக மீன்களை படம் பிடித்து வியப்பில்
ஆழ்த்துகிறார்கள்.
உணவுக்காக நீர்நிலைகள், மலைகள் என்று கடினமான பயணத்தை மேற்கொள்ளும் யானைகள் கூட்டமாக வர, அதே சமயம் தாகத்துக்கு நீர் அருந்த வந்த புலி புதருக்குள் தன்னை மறைத்துக் கொண்டு அமைதி காக்கும் இடம் நிஜமாகவே பிரமிப்பு.
தூக்கணாங்குருவி கூடுகளை பார்த்து இப்போது வரை நாம்
வியந்து போகிறோம். இங்கே ஒரு தூக்கணாங்குருவி தன் கூட்டை கட்ட மரத்தில் போடும் முதல் முடிச்சை
எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? இதில் இன்னொரு ஆச்சரியம், இந்த
கூட்டை கட்டுவது ஆண் குருவி தான். கூடு விஷயத்தில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பெண் பறவை இணை கூடுமாம்.
நாமெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதே எறும்புகளின் வாழ்வியல், நாம் அவற்றிடம் இருந்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு புதுசு.
கடினமான வெளிப்புறத்தைக் கொண்ட பலாப்பழத்தை உண்ண முடியாமல் தவிக்கும் குரங்குகள், காட்டு அணிலின் உதவியோடு உண்ணுவது, பகிர்ந்து உண்ணும் பண்பாட்டுக்கு ஒரு சான்று.
ஐந்து வகை நிலங்களையும், அதில் வாழும் உயிரினங்களின் செயல்களையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கும் இந்த ஆவணப்படம் 60 நிமிடங்கள் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் தனதாக்கிக் கொண்டு விடுகிறது.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கல்யாண் வர்மா, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளை இதுவரை நாம் எந்த ஒரு திரையிலும் பார்த்திராத கோணத்தில் காண்பித்து வியக்க வைக்கிறார்.பிரமிக்க வைக்கிறார் என்றும் சொல்லலாம்.
ரிக்கி கேஜின் பின்னணி இசை, காட்சிகளோடு நம்மை இணைத்துக் கொள்கிறது. நடிகர் அரவிந்த் சுவாமியின் ஆங்கில விளக்கங்கள் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த
‘வைல்ட் தமிழ்நாடு’ தரும் திரை அனுபவம் நிச்சயம் புதுசு.
