பெற்றோர் இல்லாத விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா, சிறு வயது முதலே நண்பர்கள். அதுவும் உயிர் நண்பர்கள்.
இந்நிலையில் ஒரு சந்திப்பில் விஜய் விஷ்வா மீது நாயகி மஹானாவுக்கு காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய வர, அவர் விஜய் விஷ்வாவை மிரட்டுகிறார். நண்பனை மிரட்டும் ஜான் விஜய்யை எதிர்க்கும் நலீப் ஜியா, ‘நண்பனுக்கு உன் தங்கையை திருமணம் செய்து வைப்பேன், நான் உயிருடன் இருக்கும் வரை அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று சவால் விடுகிறார்.
கல்யாணத்தை நடத்த ஜியாவும் நடத்தவிடாமல் தடுக்க ஜான் விஜய்யும் தீவிரமாக, இதற்கிடையே, ஜியா திடீரென்று காணாமல் போகிறார். அவரை ஜான் விஜய் தான் கொலை செய்திருப்பார், என்று நினைத்து விஜய் விஷ்வா நீதிமன்றத்தில் முறையிடுகிறார்.
உண்மையில் ஜியா காணாமல் போனதற்கு ஜான் விஜய் காரணம் அல்ல என்பது தெரிய வர, ஜியா என்ன ஆனார்?, அவர் சொன்னது போல் நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, இல்லையா? என்பது தான் ‘கும்பாரி’ படத்தின் கதை.
கும்பாரி என்றால் கன்னியாகுமரி வட்டாரத்தில் நண்பன் என்று பெயர் அதற்காக இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
நாயகன் விஜய் விஷ்வா, நடனம், ஆக்ஷன், காதல் காட்சி என அனைத்து ஏரியாவிலும் இறங்கி அடித்திருக்கிறார். மஹானாவுடனான காதலிலும் ஸ்கோர் பண்ணுகிறார். நண்பன் கொல்லப்பட்டிப்பானோ என சந்தேகிப்பதில் தொடங்கி நடிப்பில் இன்னொரு மைல்கல்லை எட்டுகிறார்.
நண்பனாக வரும் நலீப் ஜியா, ‘என் நண்பனுக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன்’ என்று கூறி வில்ல வட்டாரத்தை எதிர்கொள்ளும் காட்சிகளில், நலீப் ஜியா அசத்தல்யா.
நாயகியின் அண்ணனாக ஜான் விஜய், வழக்கம்போல இதிலும் வாங்கிய சம்பளத்துக்கு அதிகமாக நடித்து வைக்கிறார்.
காமெடிக்கு பருத்தி வீரன் சரவணன், மதுமிதா, செந்திகுமாரி, சாம்ஸ், காதல் சுகுமார் என்று ஒரு கலகல அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் கெவின் ஜோசப், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம், திரைப்படங்களில் அதிகம் பார்த்திராத லொக்கேஷன்களை தேடிப் பிடித்து காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார்.
ஜெயபிரகாஷின் இசையில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய பாடல் பேச்சுத் தமிழில் புதிய அனுபவம்.
கும்பாரி, நட்பும் காதலுமாய் ஒரு சுகானுபவம்
