டெவில் திரை விமர்சனம்

விதார்த்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவிடம்இருந்து விலகி விலகி செல்கிறார் விதார்த். விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்பட்டு காலப்போக்கில் அது காதலாக மாறுகிறது.

விதார்த்துக்கு சுபஸ்ரீ என்றொரு காதலி இருக்கிறாள். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும்போது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு நாள் பூர்ணா தன் காதலனுடன் இருக்கும்போது விதார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? அதன் விளைவு என்னவானது? என்பதே இந்த டெவில்.

முதல் பாதி முழுவதும் பூர்ணா-திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் பூர்ணா- விதார்த் இடையிலான பிரச்சினைகளை விரிவாக பேசி எதிர்பாராத கிளைமாக்சுடன் படத்தை முடிக்கிறார்.

படத்தில் மொத்தம் நான்கே கதாபாத்திரங்கள். அவர்களை சுற்றி படம் முழுவதும் நகர்கிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். இருப்பினும் உளவியல் ரீதியில் கதை சொன்ன விதத்தில் படம் தப்பி விடுகிறது.

வழக்கறிஞராக வரும் விதார்த், சுபஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் நடிப்பு கொட்டுகிறது.. பூர்ணாவிடம் அவர் மண்டியிட்டு அழும் காட்சிகள் நம் கண்களை நயாகரா ஆக்கும் இன்னொரு இடம்.

பூர்ணாவுடனான நட்பு காதலாக டெவலப் ஆகும் இடங்களில் திரிகுன் நடிப்பில் நவரசம் தெரிகிறது.
.நாயகி பூர்ணாவுக்கு நடிப்பதற்கான ஸ்கோப் அதிகம். அதை அளவாக அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தடுமாறும் மனது தடம் மாற தயங்கும் இடங்களில் அந்த உணர்வுகளை அழகாய் கடைசி ரசிகன் வரை நடிப்பால் கடத்தி விடுகிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கரை சேர்கிறார்.

மிஷ்கின் இசையில் பாடல்கள் மெலடி ரகம். பின்னணி இசையில் மிரட்டி விடுகிறார்.. கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

நம் மனதில் இருக்கும் நெகட்டிவான எண்ணங்கள் தான் டெவில். எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும் என்ற ஒருவரி கதையை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்கிய ஆதித்யா, இயக்கத்தில் நிமிர்ந்து நிற்கிறார்.