இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பை சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினி) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே சண்டைக்கோழிகளாக இருக்கிறார்கள்.
கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகி வந்த இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த சமயத்தில் கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டதா? தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதே ‘லால் சலாம்’.
இப்படி ஒரு கதைக்களத்தை திரைப்படுத்தியதற்கே முதலில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சலாம் வைக்கலாம். மத நல்லிணக்கத்தை வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்கத்துக்கு பெருமை சேர்த்து விடுகிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் – விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டு வினையாவது இதெல்லாம் எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது என்பதை சொல்கிறது. பிற்பகுதி இதற்கு தீர்வு தருகிறது.

படத்தில் கெஸ்ட்ரோல் என்று வந்தாலும் மொத்த படத்திலும் ஒரு கலக்கு கலக்குகிறார், ரஜினி.
படத்தில்அவரதுஅறிமுக காட்சிக்கே ஒரு சலாம் வைக்கலாம். அந்த கேரக்டரில் அவரது நடிப்பு பக்குவமும் இணைந்து கேரக்டரை பெருமைப் படுத்தி விடுகிறது. மதநல்லிணக்கம் தொடர்பாக அவர் பேசும் வசனங்கள் அனைத்துக்கும் அரங்கம் கரகோஷம் வாங்குகிறது. குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து பேசுவது, இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் பேசுவது ஆகிய காட்சிகளில் மாஸ் ஹீரோவாக நின்று நிலைக்கிறார்.
படத்தின் பிரச்சினையே முதல் பாதி கதைநான்-லீனியரில் சொல்லப்படுவது தான். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டுமே ஆறு மாத இடைவெளியில் நடப்பவை என்பதால் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் குழப்பம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா, அல்லது கிரிக்கெட் களமா? என்று தெளிவாக சொல்ல முடியாமல் அல்லாடும் திரைக்கதை பலவீனம்.
விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ்,. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் என நட்சத்திரக் கூட்டம் அதிகம். தன்யா. இறுதிக் காட்சியில் ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் ஈர்க்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் நெஞ்சுக்குள் ஜில்.
மத நல்லிணக்கத்தை பிரசார நெடியில் தராமல் தரமான ஒரு கதைக்களம்மூலம் தந்த விதத்துக்காகவே இயக்கிய ஐஸ்வர்யாவுக்கு வைக்கலாம், ஒரு ஸ்பெஷல் சலாம்.
