பாம்பாட்டம் திரை விமர்சனம்

‘நான் அவன் இல்லை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம். வடிவுடையான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் ஏனைய நட்சத்திரங்கள்.

சுதந்திரத்திற்கு முன்னால் நடக்கும் கதை. ராணி மகாதேவி தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோதிடர் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூற, இதனால் சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொன்று விடுமுாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி. அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது.

மேலும் ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோதிடர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் கதை.

ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக அவர் வரும் காட்சிகள் கம்பீரம்.
ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் ராணியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

நட்சத்திரங்களில் சுமன், ரித்திகா சென், ரமேஷ்கண்ணா, லிவிங்ஸ்டன் தங்கள் பாத்திரத் தேர்வை நியாயமாக்குகிறார்கள்.

படம் முழுக்கவே நிறைய இடங்களில் சிஜி காட்சிகள் மிரட்டுகிறது. முதல் பாதி கலகலப்பும் , இரண்டாம் பாதி திருப்பங்களுடனும் ரசிக்கவைக்கிறது. அம்ரிஷ் இசையில் பின்னணி இசை மனதோடு இசைகிறது. இயக்கிய வடிவடையான் வித்தியாசமான கதைக்கருவை கையாண்ட விதத்தில் வெகுஜன ரசிகனை தனக்குள் ஈர்த்துக் கொள்கிறார்.